25 ஜனவரி, 2010


பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மக்களுக்கு உதவச் சென்ற இலங்கைப் படையினருக்கு இடையூறுகள்-

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கச் சென்றிருக்கும் இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கச் சென்ற இலங்கை அமைதிகாக்கும் படையினரைச் சுற்றிய 3ஆயிரம் மக்கள் அவர்களுக்கு இடையூறுகளை விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிவாரண உதவிகளை வழங்கும்பொருட்டு இலங்கையின் அமைதிகாக்கும் படையினர் ஹெய்ட்டியின் புதிய காற்பந்து விளையாட்டு மைதானத்தில் முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளனர். இவ்வாறு இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டபோதிலும் அதில் எவருக்கும் காயங்களோ பாதிப்புக்களோ ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது.

திருகோணமலை நகரசபை தலைவர் கௌரிமுகுந்தனின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது-

திருமலை நகரசபை தலைவர் ச.கௌரிமுகந்தனின் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டுள்ளது. நாiளை 26.02.2010 நடைபெறவிருக்கும் 6வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக விடுக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்தே இந்நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலகப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதுவும் நடக்கலாம் என தான் அஞ்சுவதாக கௌரிமுகுந்தன் தெரிவித்துள்ளார். இது விடயமாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தான் அறிவித்தபோது தேர்தல் கடமைகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி


No Image

நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் தெரிவுசெய்யப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணிகள் இன்று காலை நடைபெற்றன. நாளைய தேர்தலுக்காக 250,000 அரச அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தைச் சோந்த 539 வாக்களிப்பு நிலையங்களுக்குமான தேர்தல் வாக்குப் பெட்டிகள் இன்று காலை முதல் யாழ்.செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

அரச மற்றும் தனியார் வாகனங்களில் வாக்குப் பெட்டிகள் அந்த அந்த வர்க்களிப்பு நிலைய அத்தியட்சகரினால் பொறுப்பேற்று பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.


வவு. நலன்புரிக் கிராமங்களில் 1000 ரூபாவுக்கு அடையாள அட்டை வாங்கப்படுவதாக ஜயலத் தகவல்

No Image
வவுனியா நலன்புரிக் கிராமங்களிலுள்ள வாக்காளர்களிடம் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து அடையாள அட்டைகள் வாங்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளவென வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வடக்கிலிருந்து இந்தத் தகவல் தமக்கு சற்றுமுன்னர் கிடைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

"வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள அப்பாவித் தமிழர்களிடம் பலவந்தமாக அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் பலம் அதிகமாக உள்ளதால் அரசாங்கத்தின் துஷ்பிரயோக செயற்பாடுகளும் அதிகமாக இருக்கும்.

மக்கள் வாக்களிப்பதற்காக போக்குவரத்து சேவைகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் தேர்தல் தினமான நாளை எந்தவொரு அரச பஸ்ஸும் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அது தவிர வடக்கு கிழக்கில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் ஏராளமான வாக்காளர் அட்டைகள் தபால்நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் இதுவரை சொல்லவில்லை. இவ்வாறான சம்பவங்களை நோக்கும்போது ஆட்சி அதிகாரம் உள்ள தனிநபரின் தேவை கருதியே அரச ஆளணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக உறுதியாகக் கூற முடியும்" என்றார்.


ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை

No Image


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர். இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக