கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் குறித்து தீர்வு காண புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.
அவர் மேலும், "புதிய மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசர காலச் சட்டம், மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 700க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண குறித்து சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.
எனினும் இவர்களுக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதுவும்இ ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.