அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நாளை செவ்வாய்க்கிழமை கூடவிருக்கின்றது. இக்கூட்டத்தின் போது இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கான குழு நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் அவர்களை மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க சுகாதாரத் துறைக்கென சுகா தார சுத்திகரிப்பாளர்களாக 850 பேர் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இவர் களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் கொழும்பு – 7 லுள்ள ஜோன் டி சில்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிடுகையில், சுகாதார சுத்திகரிப்பாளர் தொழில் பெற் றுத் தருவதாக இரு மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றரை இலட்சம் ரூபா படி இருவரிடமும், மற்றொருவரிடம் 75 ஆயிரம் ரூபாவை மற்றொரு மாகாண சபை உறுப்பினரும் பெற்றுள்ளனர். இவர்கள் பணம் பெற்றதற்கும், அப்பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதற்குமுரிய ஆவணங்கள் தம்மிடமுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ல. சு. கட்சியின் மத்திய குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை அரசாங்க சுகாதாரத் துறையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வேறு எவராவது பணம் பெற்றிருந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களையும் ஆவணங்களையும் தமக்கு வழங்குமாறும் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக