1 பிப்ரவரி, 2010

இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல்



இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்திய மீன்பிடிப்படகுகள் அதிக அளவில் இலங்கை கடல் எல்லையை கடந்து வருகின்ற போதும், அவற்றை கைப்பற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் 116 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில், அறிவித்திருந்தது.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்படுவதாக மத்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு நிகராக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியிலும் நுழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள், மிகப்பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில், எமது செய்திப்பிரிவு வினவியபோது அமைச்சர் நியோமல் பெரேரா இதனை தெரிவித்தார்.


இலங்கைத் தமிழர் குறித்து சிவ்சங்கர் தமிழக முதல்வருடன் ஆலோசனை


No Image
தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் நேற்று முதல்வர் கருணாநிதியை சென்னையில் சந்தித்து, இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றதையடுத்து நேற்று சென்னை வந்த அவர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக, முதலமைச்சர் கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்தத் தாக்குதல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக விரிவாகப் பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் " என்றார்.

மகிந்த ராஜபக்ஷ 2 ஆவது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார். எனினும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாகத் தெரிகிறது.

இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக