14 பிப்ரவரி, 2010

நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்

2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு


பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

அதேவேளை 700 பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டி னார்.

வவுனியாவில் நிவாரணக்கிராமங்களி லிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216 பேர் கடந்த சனிக்கிழமை பெரிய பரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கை கள் துரிதப்படு த்தப்பட்டமைக்கு அமைய சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்க ளது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தாமத மடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




அரச வைத்தியசாலைகள்:
98 வகை மருந்துகளை கொள்வனவு செய்ய
உயர்மட்டக் குழு இன்று இந்தியா பயணம்



அரசாங்க ஆஸ்பத்திகளுக்கென 98 வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்யவென உயர்மட்டக் குழுவொன்று இன்று 15 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகின்றது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்து பொருள் விநியோகப்பிரிவு, திறைசேரி என்பவற்றின் பிரதிநிதிகளும், பிரதம மருந்தாளரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இந்தியாவுக்குப் பயணமாகின்ற இக்குழுவினர் அடுத்துவரும் பத்து நாட்களுக்குள் இந்த 98 வகையான மருந்துகளையும் இந்நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு இக்குழுவி னரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறுகையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் 98 வகையான மருந்துகள் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தான் கையிருப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் இந்த 98 வகையான மருந்துகளையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த மருந்துகளை உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த 98 வகையான மருந்துகளும் அடுத்துவரும் 6 மாதங்களுக்குத் தேவையான அளவு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை அரசாங்க ஆஸ்பத்திரிகளின் மருந்து பொருள் கையிருப்பு நிலைமையை அடிக்கடி கண்காணிப்பதற்கும் அதற்கு ஏற்ப மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுமென அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் விசேட பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது என்றார்.


கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவும் போட்டி
25இல் பதவியிலிருந்து இராஜினாமா


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அபேட்சகராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா போட்டியிடு கின்றார். அதற்கமைய தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று தினகரனுக்கு கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சுப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா கையளிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட கூட்டத்தில், கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படு மெனவும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விண்ணப்பிக்கும் காலம் புதன் முடிவு



இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் :-

இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப் பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.



தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க
பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு


பொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தபால் மூல வாக்களிப்பு:

16 முதல் 22 வரை விண்ணப்பம் ஏற்பு


பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப் பங்கள் நாளை 16ம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப் படவுள்ளன.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தர் ஆணையாளர் ரி. கிருஷ்ணானந்தலிங்கம் அறிவித்து ள்ளார்.

தபால் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங் களை அறிந்து கொள்வதற்கு வசதி யாக 2008ம் ஆண்டிற்கான அத் தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படு த்தும் அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பொலிஸ் மா அதிபர் - பொதுமக்கள்
சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்



பொது மக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பொலிஸ் மா அதிபரை சந்திக் கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்ப ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேலைப்பளு காரணமாகவே பொது மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரியஷாந்த் ஜயகொடி தெரிவித்தார்.

பொது மக்கள் பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்திக்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை பொது மக்கள் நேரடியாக சந்திக்கு நடைமுறை நிறுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மாதகாலத்திற்குள் அவசர தேவைக்கான உதவி பெற விரும்புபவர்கள் 0112-472592 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக் கையில்:- தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள் ளமை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்த னுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தல்: தேர்தல் செயலகத்தில் நாளை கூட்டம்


பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக தேர்தல் செயலகத்தில் நாளை 16ம் திகதி முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயான ந்த திஸாநாயக்கா தலைமையில் தேர்தல் செயலகக் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெற விருக்கின்றது.

மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் போன் றோர் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் கூறினார்


மருதமடுவில் கிளேமோர் மீட்பு

வவுனியா, மருதமடு பிரதேசத்தி லிருந்து எட்டு கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகளை பாதுகாப்புப் படையி னர் மீட்டெடுத்துள்ளனர். இராணு வத்தின் பொறியியல் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இந்த கிளேமோர் குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது என்று இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.


சத்துணவு நஞ்சாகிய விவகாரம்;

ஒப்பந்தக்காரருக்கு விளக்கமறியல்;சி உதவியாளருக்கு சரீரப்பிணை



சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக