28 ஜனவரி, 2010

வெற்றிபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வாழ்த்து-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதீபா பட்டேல், தனது வாழ்த்துச் செய்தியில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் இலங்கை மிக வேகமாக முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் வரலாற்றுரீதியாக மிக நெருங்கிய நட்பு காணப்படுவதாக கூறிய அவர், இலங்கையுடனான அனைத்து உறவுகளும் மேலும் வலுவடைய இந்தியா உறுதியாகவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருநாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இலங்கையுடன் இணைந்து வளர்ச்சிப் பணிகளில் பணியாற்ற இந்தியா தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கட்சி முகவராக செயற்பட்டவரின் தந்தையின் கடைக்கு தீவைப்பு-

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00மணியளவில் இந்த தீவைப்பு இடம்பெற்றுள்ள நிலையில் பெறுமதியான பொருட்களுடன் கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடையின் உரிமையாளரின் மகன் தேர்தலன்று கட்சியொன்றின் முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமென்று அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டு. மாநகரமேயர் சிவகீதா பிரபாகரனின் இல்லம்மீது தாக்குதல்-

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீது நேற்று கிரனேட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதேபோன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் திருமதி சிவகீதா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அவசியமென சரத்பொன்சேகா கோரினால் வழங்கத் தயார்-அரசு-

ஜெனரல் சரத்பொன்சேகா தனக்குப் பாதுகாப்பு அவசியமெனக் கோரும்பட்சத்தில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கத் தயாரென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத்அமுனுகம செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த உத்தரவு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறிள்ளார். இந்நிலையில் ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு பாதுகாப்பு அவசியமென கோரும் பட்சத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்-

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மாலைமுதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச்சென்று அவருடன் இருந்த 09இராணுவ அதிகாரிகள் தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளனர். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவசவாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல்வரை அவை கையளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஏற்பாடு-

கடற்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தாம் இந்தியாவுடன் இணைந்து தீர்வு காணவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இலங்கை கடலோர எல்லைப்பகுதிகளில் இருநாட்டு மீனவர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியக் கடல் எல்லையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 09ம்திகதி மீன்பிடிப்பதற்கென மன்னார் சிறுதோப்பு பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் இந்திய கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இரு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கு இன்றுமுதலே தயாராவதாக அரசாங்கம் அறிவிப்பு-

இன்றுமுதலே அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை இன்றுமுதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்ட எதிர்பார்த்துள்ளதாகவும், இதன்மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரநிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள மகிந்த சிந்தனைத் திட்டத்தின் பிரகாரம் வளமானதும் சுபீட்சமானதுமான நாட்டை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக