22 டிசம்பர், 2009

பக்கிங்ஹாம் மாளிகையைப் பார்வையிட முடியாது : மகாராணி அறிவிப்பு
No Image




இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளது. இங்கு அரச குடும்பத்தினர் தங்கி யுள்ளனர். பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு அரண்மனையை மூட மகாராணி எலிசபெத் முடிவு செய்துள் ளார். அரண்மனையில் உள்ள கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள வேலைப்பாடு மிகுந்த கற்கள் விழுவதாகவும். அதில் சிக்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே போன்று, இளவரசி ஆன்னி சென்ற கார் மீது கட்டிடத்தின் கற்கள் விழ இருந்து பின் தப்பித்தது. வேகமாக கார் சென்று விட்டதால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. மேலும், தரையில் கீறல்கள் இருப்பதால் நடப்பதற்கு கூட அரண் மனை ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் பார்வைக்குத் திறப்பதில்லை என மகாராணி எலிசபெத் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் அரண்மனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் அரண்மனை மராமத்து பணிக்காக ரூ.320 கோடி ஒதுக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




கொழும்பு வரும் மலையகத்தவர் இனி பொலிஸில் பதிவு செய்யத் தேவையில்லை : பசில்

No Image


தலைநகர் கொழும்புக்குச் செல்லும் தமிழர்கள் தங்களைக் காவல்நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மலையகத்திலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

வெளியிடங்களிலிருந்து கொழும்பு செல்லும் தமிழர்கள் காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென இதுவரை காலமும் இருந்த நடைமுறை தளர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இலங்கைக்கு இந்திய அரசாங்கம் 425 மில்லியன் டொலர் உதவி


No Image



இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிதியானது ஒமந்தையிலிருந்து பளை , மடு- தலைமன்னார் வரையான ரயில் பாதை அமைப்பதற்கும், மற்றும் வஎடக்கிற்கான விநியோக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.



ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு 12,13 ஆம் திகதிகளில்

No Image


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி மாதம் 12,13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால்மூலம் வாக்களிப்பதற்காக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டு 30 ஆம் திகதி அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.



ஜெனரல் பொன்சேகாவின் வெற்றி ஜீ.எஸ்.பி சலுகைக்கு வழிவகுக்கும்-ரணில்


No Image

எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் ஜனநாயக உரிமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பாதுகாக்காவிடின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை எமது நாட்டுக்குக் கிடைக்காது போய் விடும். எனவே, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ள ஜெனரல் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதன் மூலம், வரிச்சலுகையினை பெற வழி பிறக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது மக்கள் கருத்துக் கணிப்பாகும்.

ஏனென்றால் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியே இன்று முன்னெடுக்கப்படுகிறது. அதற்காகவே ஜெனரல் பொன்சேகா போட்டியிடுகின்றார்.

ஜிஎஸ்பி வரிச் சலுகையை வழங்கவேண்டுமென்றால் நாட்டில் சிவில் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

2010 ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் இந்த விடயங்களில் முன்னேற்றத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆடைத் தொழிற்றுறைக்கான ஜீ.எஸ்.பி.பிளஸ் வரியை வழங்க மாட்டோமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் இவையனைத்தையும் நிøவேற்றப் போவதில்லை. சர்வாதிகார ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கிறது. எனவே மேற்கண்டவாறு ஜனநாயக முறைமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக பத்து அம்சதிட்டங்களை முன்வைத்து பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மக்கள் முன்னிலையில் உறுதிமொழி வழங்கி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உட்பட பொருளாதார அபிவிருத்திக்காக வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதைவிடுத்து மியன்மாரைப் போன்று இலங்கையை மாற்ற முனைபவர்களின் கைகளில் ஆட்சியை வழங்கினால் என்ன நடக்கும்? ஆடைத் தொழிற்றுறை சார்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேலõனோர் தொழிலை இழப்பார்கள். எனவே மக்கள் சிந்திக்கவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச வர்த்தக அமைப்பில் முறையிடப் போவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது நடைமுறை சாத்தியமற்ற நடவடிக்கையாகும்.இவ்வாறான முறைப்பாட்டை விசாரித்து முடிப்பதற்கு மூன்று வருடங்களாகும்.

அதுவரையில் இந்த வரிச் சலுகையை இழந்து நாம் எவ்வாறு ஆடைத் தொழிற்றுறையை பாதுகாக்கப் போகிறோம்? அதிக விலை கொடுத்து எமது ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு எந்தவொரு நாடும் முன்வரப் போவதில்லை. இவ்வாறு பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே 2011 ஆம் ஆண்டு வரை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாவதன் மூலமே இது சாத்தியமாகும் என்றார்.



வாக்குகளை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது-ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு

No Image


தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகளையும் மீறி அரசாங்கம் வன்முறைகளிலும் தேர்தல் சட்டங்களை மதிக்காமலும் செயற்படுகிறது. இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று ஐ.தே.க.வின் பிரதித் தலைவரும் அமைச்சருமான கரு ஜெயசூரிய தெரிவித்தார். இடைத்தங்கல் முகாம்களுக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் செல்வதை தடுத்து வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,கட்அவுட் போஸ்டர்களை அகற்ற வேண்டும், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரங்கள் நடத்தப்படலாகாது.

அரச வளங்கள் பாவிப்பதை கைவிட வேண்டும். அரச ஊடகங்களில் எதிர்க் கட்சிக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு கிராம சேவகர் ஊடாக தேர்தல்கள் ஆணையாளரின் உறுதிப்படுத்தலுடனேயே தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்..

மேற்கண்டவாறு தேர்தல்கள் ஆணையாளர் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ அரசாங்கமோ இவையனைத்தையும் கண்டுகொள்வதில்லை. மாறாக அனைத்து தேர்தல் சட்டங்களையும் மீறிச் செயற்படுகிறது..

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரோடு சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். அது மட்டுமல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம். வட பகுதியில் 8000 பேருக்கு மட்டுமே வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணையாளருடன் பேசவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சியினரால் முடியாதுள்ளது. எமக்கு அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கரு ஜயசூரிய எம்.பி. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக