13 டிசம்பர், 2009

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.விஜயம்


நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜெயவர்த்தன, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து தமது முதல் விஜயத்தை நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்தனர். தொடர்ந்து ஆரியகுளம் நாகவிகாரையை தரிசித்த இக்குழுவினர் ஆரியகுளத்தில் உள்ள புதிய உயர் கல்லூரி மாணவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தினைச் சந்தித்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்தின் நிலமைகள் பற்றியும், எவ்வகையான செயற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் கேட்டு அறிந்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இக்குழுவினர் அங்கு துணைவேந்தர் இல்லாததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.இளங்குமரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடனான சந்திப்பினை மேற்கொண்டனர். அங்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விடுக்கப்பட்ட கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவும், மனோ கணேசனும் விளக்கமளித்தனர்.

முக்கியமாக தேர்தலில் அன்னப்பறவை சின்னத்திற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும்? என்ற கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்பட்டது. இது குறித்து மனோ கணேசன் பதிலளிக்கையில்,"யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு என்பது கிடைக்கப் போவது இல்லை, இருந்தும் தற்போதுள்ள தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே அன்னப்பறவைக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் விசாரணைக்குட்படுத்த வேண்டியவர்களை விசாரணை செய்தும், மற்றவர்களையும் விடுவித்தல், அவர்களுக்கான புனர்வாழ்வு அழிக்கப்படுதல்,

காணமற்போனோர், மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுதல், தொழிற்சாலைகள் உருவாக்கப்படல், 2 இலட்சம் வேலை வாய்ப்புக்களை யாழ்ப்பாணத்தில் வழங்கல், கல்வித் துறையை நவீனமயப்படுத்தல் குறிப்பாக உயர் கல்விகள், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்க வைத்தல், ஏ-9 பாதையினை 24 மணிநேரப் பயன்பாட்டிற்குரியதாக்கல், மற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல் போன்ற தேர்தல் உறுதி மொழிகள் யாழ்ப்பாண மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் உள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கும், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கும் விஜயங்களை மேற்கொண்டார். வணிகர் கழகத்தில் யாழ்ப்பாண வணிகர்களின் ஏ-9 பாதையூடான போக்குவரத்தை சுதந்திரமாக்கல், மற்றும் வணிகள்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக