22 நவம்பர், 2009

ஓசியானிக் கப்பலிலிருந்து வெளியேறியோர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படும் சாத்தியம்


இந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 இலங்கையர்களும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.

" எமது நாட்டு எல்லையில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தங்குவதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இவர்களுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்" என ஜகார்த்தாவிலுள்ள வெளிவிவகார விடயங்களுக்கான திணைக்களத்தின் பேச்சாளர் ரேகு பைசாயா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தரையிறங்கிய இவர்கள் தற்போது இந்தோனேசியாவின் ரியூ தீவில் உள்ள டன்ஜுன் பினாங் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை அகதி அங்கீகாரத்தை வழங்காதுபோனால், அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின், உறுதிமொழியை நம்பி 22 அகதிகள் முதலில் கப்பலில் இருந்து இறங்கினர். இதன் பின்னரே ஏனையோரும் தரையிறங்கினர். இதேவேளை 250 அகதிகளை கொண்டுள்ள இலங்கையர்களின் மற்றும் ஒரு கப்பல் இன்னமும் இந்தோனேசியாவில் தரித்து நிற்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக