6 நவம்பர், 2009

மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அனுப்ப பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தீர்மானம்




வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குச்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்கொய்ஸ் ஸிமெரெயை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு பிரான்ஸினால் வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஏதுநிலைகள் தொடர்பிலும் ஆராயும் பொருட்டே அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவின் மிகப் பழைய யுத்தம் நிறைவடைந்து ஆறு மாத காலங்கள் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்கள் அதன் தாக்கங்களை இன்னும் அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், அவர்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

முகாம்களுக்குள் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் கஷ்டமானதாகவே இருப்பதாக தெரிவித்த அவர், இதன் காரணமாகவே மனித உரிமைகள் தூதுவரை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இலங்கையில் இந்தமாதம் 5ம் மற்றும் 7ம் திகதிகளுக்கு இடையில் தங்கியிருந்து, அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையின் சட்ட திட்ட அமுலாக்க நடைமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்து அறிக்கைப்படுத்துவார் என குச்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் யுத்த மற்றும் மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக