22 செப்டம்பர், 2009

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது : தர்மசிறி லங்கா பேலி



ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இவர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும் ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் எட்டு ஊடக நிறுவனங்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கம், இதுவரையில் செயலற்றுக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள்ள அச்சு ஊடகங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த அன்றேல் அச்சு ஊடகங்களை நிர்வகிப்பதற்காக, அடக்கியாள்வதற்காகவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இவற்றை எவ்வித மாற்றங்களும் இன்றி, இன்றைய நிலைக்கு இவை பொருத்தமானவைதானா என ஊடக சங்கங்களுடனோ ஊடகவியலாளர்களுடனோ ஆராய்ந்து பார்க்காமலும் எவருடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளை நடத்தாமலும் மீண்டும் இயங்கு நிலைக்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

பத்திரிகை பேரவையை மீண்டும் இயக்க முயற்சிப்பதற்கு நாம், ஊடக அமைப்புக்கள் என்ற வகையில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்மூலமாக அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டிலுள்ள மக்கள், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்குப் பங்கத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது.

இந்த நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை நாம் நன்கறிவோம். ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் அறிவோம்.

அண்மையில் போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இன்னமும் அவரால் இரு பாதங்களையும் நிலத்தில் ஊன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தடி உதவியுடன் கூட ஊன்றி நடக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. போத்தல ஜயந்த இந்த சமூகத்திற்கு இழைத்த அநீதிதான் என்ன என்று நான் கேட்கின்றேன்.

இந்த நாட்டுமக்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமைக்காக குரல் கொடுத்துச் செயற்பட்டமைக்காகவே இவர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு கூட அரசாங்கம் தவறியுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்குக் கூட அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதுபோன்றதே ஊடகவியலாளர்கள் கடத்தப்படும் சம்பவங்களும்.

ஊடக நிறுவனங்களை எரியூட்டுதல் போன்ற எந்தச் சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவினரோ பொலிஸாரோ, இதற்குக் காரணமானாவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் இந்த நாட்டின் எட்டு ஊடக நிறுவனங்களைச் சார்ந்த நாம், இந்த மேடையில் ஒன்றுகூடி, இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது ஊடகவியலளார்களின் கடமை. எனவே அக்கடமையைச் செய்ய ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை அகற்றுமாறும், கொடுரத் தாக்குதல்களையும் ஊடக அடக்குமுறையையும் உடனடியாக நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக