18 டிசம்பர், 2009


அபிவிருத்திக்கான சவாலையும் எதிர்கொள்ளத் தயார் -ஜனாதிபதி

நெருக்கடியான காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளோம். அடுத்துவரும் அபிவிருத்திக்கான சவாலை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்மைகயின் 6வது ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்க ளுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று பயங்கரவாதம் எனும் பாரிய பிரச்சினைக்கு வெற்றி கண்டுள்ளோம். இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெறுவது உறுதி. முதலாவது பாரிய சவாலை வெற்றிகொண்டது போன்றே அடுத்த அபிவிருத்தி சவாலையும் வெற்றிகொள்வோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 6வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.



தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.


தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்

தேர்தல்கள் ஆணையர்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள 88 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் உள்ளன. ஏனை யோருக்கும் தற்காலிக அடையாள அட்டையினை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இது தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை முற்றாக நிராகரித்த அவர், அத்தகவல்கள் தவறானவை எனவும் வாக்களிக்கத் தகுதியுள்ள நாட்டின் சகல பிரஜைகளுக்கும் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் உன்னதமான பதவியாகிய ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் இதுவாகையால் நீதியும் நேர்மையும், அமைதியுமான தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனத் தெரிவித்த அவர், வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத தேர்தலாக இத்தேர்தல் அமைவதிலும் சம்பந்தப்பட்ட சகலரும் பூரண கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி வேட்புமனுத் தாக்கலையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 14,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையப் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் நாளை பேச்சுவார்த்தையொன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தைக்கு வடக்கின் சகல மாவட்டச் செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசித்து வாக்களிப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

வழமைபோன்றே இம்முறையும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேசிய, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆசிய நாடுகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவும், ஐரோப்பிய யூனியன் கண்காணிப்புக் குழுவும் இதற்கான இணக்கத்தைத் தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் வருகை தொடர்பில் இதுவரை முடிவு கிடைக்கவில்லை.


ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி

இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார்.

இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாகவே இரண்டு ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேற்படி இரண்டு மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார். இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அத்துடன், இடதுசாரி முன்னணியின் சார்பில் விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க. மாற்றுமுன்னணியின் சார்பில் சரத் கோங்காகே, ஐக்கிய சோசலிசக் கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் விஜய டயஸ், யாவரும் பிரஜைகள் யாவரும் மன்னர்கள் அமைப்பின் சார்பில் எம்.பி. தெமினிமுல்ல, புதிய சிஹல உறுமய கட்சியின் சார்பில் சரத் மனமேந்ரவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தேசிய அபிவிருத்தி முன்னணியின் சார்பில் அச்சல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சியின் சார்பில் ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி சார்பில் கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எம். சீ. எம். இஸ்மாயில், ருஹுணு மக்கள் கட்சி சார்பில் அருண டி சொய்சா, தேசிய முன்னணி சார்பில் சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பில் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சன்ன ஜானக கமகேயும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி கே. சிவாஜிலிங்கம், யாழ் மாவட்ட முன்னாள் எம்.பி ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ.தே.க. எம்.பி. யு.பி. விஜேகோன், டபிள்யூ. வீ. மஹிமன் ரஞ்சித் ஆகிய சுயேச்சை வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஏ. எச். எம். பெளஸி, டி. எம். ஜயரத்ன, பேரியல் அஷ்ரப் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பல மாகாண முதலமைச்சர்களும், பெஷில் ராஜபக்ஷ எம்.பி.

உட்பட ஆளும் கட்சி, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக