21 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக