21 நவம்பர், 2009

இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச்செயற்படவேண்டுமென்றால்




இன்றைய காலகட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒருமித்துச் செயற்படவேண்டுமென்றால், முதலில் எங்களை நாங்களே ஏமாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மனம் ஈடுபடுகின்ற மாயங்களின் பயனாய் அது தன்மீதும், பிறர் மீதும் திணிக்கப் படுபவற்றையும் அவற்றின் விளைவுகளையும் குறிக்கும் ஒரு தன்மை. இதைத்தான் 'தன் ஏமாற்று' என்பார்கள்.
குறிப்பாக இப்போது உள்ள நெருக்கடி நிலையில் ஒவ்வொருவரும் தன்னை ஏமாற்றிக் கொள்வது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்வது என்றால்அதை வெறும் சொல்லளவில் பின் தொடர்ந்து பார்க்காமல் உள்நாட்டமாக, அடிப்படையாக, ஆழமாகப் பார்க்க வேண்டும். நாங்கள் எல்லோரும் மிக எளிதில் வார்த்தைகளுக்கும் எதிர் வார்த்தைகளுக்கும் திருப்திப் படுபவர்களாக இருக்கின்றோம்இதுதான் எங்கள் எல்லோரினதும் நடைமுறையாக உள்ளது.

தன்னை ஏமாற்றிக் கொள்வதில் முக்கிய அங்கமாகத் திகழ்வது ஏதோ ஒன்று நடக்கும் என்ற நப்பாசைதான். எடுத்துக்காட்டிற்கு, போர்களுக்கான விளக்கம் போரை நிறுத்தவில்லை என்பது எம் அனைவருக்கும் புரியும். பல ஆய்வாளர்களும் அனுபவம் கொண்டவர்களும் போரைப்பற்றியும்அதன் காரணி பற்றியும் விளக்கம் தந்துள்ளார்கள். ஆனாலும் போர் ஏதோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதுவும் முன் எப்போதையும்விட கூடிய அழிவு சக்தியுடன் தொடர்கின்றது. உண்மையில் அக்கறை கொண்டவர்கள் இந்த வார்த்தை விளக்கத்தைத் தாண்டி அப்பாற் சென்று எங்களுக்குள்ளே அடிப்படையான மாற்றத்தை நாடவேண்டும்எங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் அடிப்படையில் மீட்கும் வழி அது ஒன்றுதான்.

ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஏமாற்றுவது பற்றி அறிய முற்படும்போது மேலெழுந்தவாரியான விளக்கங்களிலிருந்தும் பதில்களிலிருந்தும் எம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை எமது சிந்தனையுடனும் செயலுடனும் கவனிக்க வேண்டும்.
பிறரை எப்படிப் நாங்கள் பார்க்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாளாந்தம் எப்படி செயற்படத் தொடங்குகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
தன்னை ஏமாற்றிக் கொள்வதன் அடிப்படையும் அதற்கான காரணமும் என்ன?
எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை எம்மில் எத்தனைபேர் புரிந்திருக்கின்றோம்?

எங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதை உணர்ந்தாற்றான் தன்னை ஏமாற்றிக் கொள்ளுதல் என்ன? அது எப்படி வருகிறது? என்பவை பற்றிச் சிந்திக்கலாம்.
தன்னை ஏமாற்றுதல் என்பது எங்களுக்கு ஒருவித உந்து சக்தியையும் ஆற்றலையும் செயற்திறனையும் அளித்து இதை மற்றையவர்கள் மீது திணிக்கவும் தூண்டுகிறது. ஆகவே தன்னை ஏமாற்றுதல் எம்மீது மட்டும் சுமத்தப்படுவதுடன் நில்லாது படிப்படியாக மற்றையவர்கள் மீதும் எம்மால் சுமத்தப் படுகிறது. இதுதான் ஒன்றன்மீது ஒன்று செயற்படும் தன் ஏமாற்று நடைமுறை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகவும் குறிக்கோள் உடனும் நேர்த்தியாகவும் சிந்திக்க வல்லவர்கள் என நினைத்துச் செய்கின்றோம். ஆனாலும் நடைமுறையில் இச்சிந்தனையால் நாமே நம்மிடம் ஏமாந்துள்ளோம் என்பதை உணருவதில்லை.

எம் சிந்தனை நடைமுறையில் எப்படி ஏமாந்திருக்கிறது என்றால், எங்களுடைய சிந்தனையே தேடுகின்ற அதாவது நியாயத்தைத் தேடுகின்ற ஒன்று. எங்கள் நடவடிக்கைகளை சரி என வழிப்படுத்துவது. மற்றையவர்களின் நடவடிக்கைகளில் பிழை பிடிப்பது. இப்படிப் பல எங்களுடைய சிந்தனை என்பது தன்னை ஏமாற்றிக் கொள்வதுதானே?
ஆதாவது ஒன்றை விரும்புகின்ற அந்தக் காரணத்தினாலேயே எளிதில் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையைக் கொண்டு வருகின்றோம், அல்லது தோற்றவிக்கின்றோம். இது எங்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்தானே.
ஓரு பிரச்சனையை எப்படி அறிகின்றோம், அதாவது என்ன உள் நோக்கத்தோடு, என்ன உந்துதலோடு, எந்த ஆசையோடு என்பதுதான் முக்கியம்.

தேடுகின்ற நாங்கள் ஒவ்வொருவரும் இந்த ஏமாற்று வேலையை எங்கள் மீது திணித்துக் கொள்ளுகின்றோம். இதை நாங்களே செய்கின்றோம், வேறு யாரும் இதைத் திணிக்க முடியாது. நாங்களே எங்களுக்குள் செய்கின்றோம்.
நாங்கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக ஏமாற்றுதலைத் தோற்றுவித்து பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றோம்; இதுதான் நடைமுறை. நாங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை ஏதோ ஒரு விதத்தில் குறை கூறுகின்றோம். ஒவ்வொருவரும் மற்றையவர்களுடன் போட்டி போடுகின்றோம். இந்த மொத்த விளையாட்டுப் பந்தயம் எங்கள் எல்லோருக்கம் தெரியும்; இது ஒரு அசாதாரண தன் ஏமாற்று நடைமுறை.

நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும்வரை ஒற்றுமை இருக்க முடியாது. இதனாற்றான் ஒற்றுமை என்றால் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
மேலும் எங்களுக்கு எப்படி ஒத்துழைப்பது என்பது புரியாது. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் நாங்கள் தோற்றுவித்த ஒரு முடிவிற்காக சேர்ந்து செயற்பட முயல்கின்றோம் என்பதுதான்.
இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் அல்லது பல குழுக்கள் மத்தியில் சிந்தனை ஏற்படுத்திய பொதுவான குறிக்கோள் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இருவரும் எந்த ஒன்றாகவும் ஆகவேண்டும் என்ற குறிக்கோளும் இல்லாத போதுதான் ஒத்துழைப்பு ஏற்பட முடியும். இதை உணர்வதுதான் எங்கள் ஒவ்வொருவருக்கம் உரிய தேடலாகும்.
மேலும் நீங்களும் நாங்களும் ஏதோ ஒன்றாக விரும்பினால் பின்னர் நம்பிக்கைகளும் மற்றையவைகளும் அவசியமாகின்றது. அதாவது நாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை. இலக்குத் தேவைப் படுகின்றது.
ஆனால் உண்மையாக ஒத்துழைப்பு ஏற்பட வேண்டுமானால் எங்களிடத்தில் எந்தவிதத் தன் ஏமாற்றும் இல்லாமல் அறிவு பொய்த் தோற்றம் ஆகிய தடைகளும் இல்லாமல் முன் அனுபவக் கருத்துக்களும் இல்லாமல் இருந்தாற்றான் உண்மையான ஒத்துழைப்பு ஏற்படும்.

ஆதே நேரத்தில் நீங்களும் நாங்களும் சிந்தித்து செயல்படுத்தி திட்டமிட்டு விளைவையும் பயனையும் தீர்மானித்து ஒன்றாகக் கூடி உழைத்தோமானால் அதில் உள்ள நடைமுறை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆதாவது அந்த நடைமுறை எங்களுடைய சிந்தனைகளும் அறிவாற்றல் படைத்த மனங்களும் சந்திக்கின்றது என்பது தெளிவு. ஆனால் உணர்ச்சிபூர்வமாக மொத்த உள்ளமைப்பும் அதை எதிர்க்கின்றது. இதுதான் தன்னை ஏமாற்றுதலைக் கொண்டு வருகின்றது. இதுதான் எங்களுக்கிடையில் பிரச்சனையை உருவாக்குகின்றது. இது எங்கள் அன்றாட நடைமுறையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஏப்படி என்றால் நீங்களும் நாங்களும் அறிவுபூர்வமாக ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய இணங்குகின்றோம். ஆனால் உள் மனதின் ஆழ்நிலையில் நீங்களும் நாங்களும் முரண்படுகிறோம். எங்களுடைய திருப்திக்கு ஏற்றபடி நாங்கள் ஒரு பயனை வேண்டுகின்றோம். நாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றோம். எங்களுடைய தலைமைத்துவத்தை முன் எடுக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து உழைப்பதாகச் சொன்னாலும் இதுதான் மன ஆழத்தின் நிலைமை?

ஆனாலும் நாங்கள் இருவரும்தான் அந்தத் திட்டத்தைத் தோற்றுவித்தவர்கள். ஒருவரை ஒருவர் எதிர்க்கின்ற நேரம் வெளிப்புறத்தில் அத்திட்டத்தை ஒத்துக்கொண்ட போதிலும்கூட நாம் எதிர்க்கவே செய்கின்றோம்; இதுதான் எங்கள் எல்லோருடைய நடைமுறையும்கூட. ஏன் எல்லா உலகத் தலைவர்களினதும் நடைமுறையுங்கூட; இதுதான் தன் ஏமாற்று நிலை.
எடுத்துக்காட்டாக எல்லா மதங்களும்; சகோதரத்துவம், ஒரே கடவுள், ஒற்றுமை என்று எல்லாம் பேசுகின்றன. ஆனால் அந்த அந்த மதக்காரர்கள் அவரவர் நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். அதே வேளை கொள்கையாகவும் அறிவாற்றலாகவும் இது இப்படித்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறோம். உள்நிலையில் நாம் ஒருத்தருக்கு ஒருவர் எதிரியாக உள்ளோம்.

இப்படித்தான் நாங்கள், நீங்கள் ஏன் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதாக இருந்தாலும், உள் நடைமுறை எங்களுக்குள் இப்படித்தான் இருக்கின்றது.
ஆகவே இந்தத் தடைகளை அதாவது தன் ஏமாற்ற வேலையாக உள்ள ஒருவித மன ஆற்றலை கொடுக்கக் கூடிய இந்தத் தடைகளை உடைக்காவிட்டால் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒத்துழைப்பே இருக்க முடியாது. இதை நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்திக்க வேண்டும்.
ஓரு கூட்டத்தோடு ஒரு குறிப்பிட்ட கருத்தோடு ஒரு கொள்கையோடு ஒன்றுபடுத்திக் கொள்வது இருக்கும்வரை ஒத்துழைப்பை ஒருபோதும் எங்களால் கொண்டு வர முடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் முட்கம்பிக்குள் உள்ள மக்களின் பிரச்சைனைகளைத் தீர்ப்பதற்கும் உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கம் கூட ஒன்றாகத் தீர்மானிக்க முடியவில்லை. பிரச்சனையைத் தீர்க்கும் கொள்கை பற்றித்தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது முட்கம்பிக்கள் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்ற நினைக்கின்றோம். ஆனாலும் எப்படிக் காப்பாற்றவது என்ற கொள்கை பற்றித்தான் அதிகம் கவலைப் படுகின்றோம..

மக்களின் பட்டினிப் பிரச்சனைக்குள்ள முக்கியத்துவத்தை விட அதை எப்படித் தீர்ப்பது என்பதுதான் எல்லோருக்கும் கூடிய கவலை அளிக்கிறது. இது ஒரு அப்பட்டமான தன் ஏமாற்றுச் செயல் என்பதை நாங்கள் உணர வேண்டும்.
மேலும் சில கடந்த கால, கடந்து வந்த பாதைகளில் இருந்து சில நபர்பற்றி சில குழு பற்றி பல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றோம். அந்த அனுபவத்தோடு ஒட்டிக்கொண்டும் இருக்கின்றோம், ஆனால் அனுபவம் பெற்றதின் மொத்த நடைமுறையினுள்ளும் சென்று பார்ப்பதில்லை. என்னில் அனுபவம் பெற்றேன், அது போதும், அதை நாங்கள் இறுகப் பற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதன்மூலம் அந்த அனுபவங்களைக் கொண்டு எங்களையே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம். இதனாற்றான் புதிய தளத்தில் புதிய பிரச்சனையைப் புதிதாகப் பார்க்க முடியவில்லை. அப்படியாயின் எப்படி ஒன்றாக வேலை செய்வது?

நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவித நம்பிக்கையோடும் கடந்த கால அனுபவங்களோடும், ஒரு பொது வேலைத் திட்டத்திற்காக ஒன்று படுத்திக் கொண்டுள்ளோம். இதனால் எங்களுடைய மனம் இதற்குள் கட்டுப்பட்டு இருப்பதால் பிரச்சனையின் ஆழத்திற்கு போய்ப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றோம். இதனால் நாங்கள் மீண்டும் தனியே ஒதுங்கி நம்முடைய குறிப்பிட்டவர்கள் நம்பிக்கைகள் அனுபவங்கள் ஆகியவற்றில் இருக்க விரும்புகின்றோம். அதாவது எங்களையே நாங்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குள் சிந்தித்து இந்த தன்னை ஏமாற்றும் செயலிலிருந்து விடுபட்டு பழைய அனுபவங்கள், முடிவுகள், கருத்துக்களை விட்டு விட்டு ஒரு பொதுவான பிரச்சனையை ஒட்டிய ஓட்டத்திற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஏனெனில் பிரச்சனை எப்பொழுதும் புதியது. ஆகவே எல்லோரும் பிரச்சனையை ஒட்டிய தொடர்ந்த ஓட்டம் ஓடவேண்டிய கால கட்டம். இனியும் தன் ஏமாற்று வேலையிலிருந்து விடுபட்டு எங்கள் தமிழ் மக்களின் பொதுவான பிரச்சனை ஒன்றுதான் அதை ஒட்டி தொடர்ந்தும் ஓட்டம் ஒன்றின் மூலம் ஒன்றாக நாங்கள் எல்லோரும் வேலை செய்வோம்.

நன்றி
ஞானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக