இலங்கையில் கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை: தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்; மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் அதிரடி அறிவிப்பு
நகரி, அக். 21-
இலங்கையில் சமீபத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்போர் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் கூறிவருகிறது. இந்த நிலையில் போரில் உயிர் தப்பிய தமிழர்களை இலங்கை அரசு திறந்த வெளியில் அடைத்து வைத்து அவர்களை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ளது.
இந்த கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அமெரிக்கா, நார்வே, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு விடுவிக்கா விட்டால் தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்க தலைவர் கணபதி அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் ஒரு இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களை கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இதற்கான விஷயங்களை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்ரவதை செய்யப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
அதிநவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு செல்வோம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை ராணுவத்தினர் அங்குள்ள பெண்களை கற்பழிக்க மாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக்கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம்.
சித்ரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற் கென்று தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம்.
எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம் - கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் தற்போது மேற்கு வங்காளம், ஒரிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென்மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக