மா.சபைகளுக்கும் அதிகார பகிர்வு தேவை : ஜனாதிபதியிடம் வலியுறுத்து | |
கட்சி பிரதிநிதிகள் குழு உத்தேச அதிகாரப் பகிர்வின் போது மாகாண சபைகளுக்கும் கூடுமானவரை அதிகாரப் பகிர்வும் பரவலாக்கமும் வழங்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளித்துள்ள தொகுப்பில் சிபாரிசு செய்துள்ளதாக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறுகின்றார். நேற்று மட்டக்களப்பு நகரில் இடதுசாரி பிரமுகர் என்.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்ற இடதுசாரி பிரமுகர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய அவர், தொடர்ந்தும் அங்கு கூறுகையில், "சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசு அமுலுக்கு வரும் வரை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் யாப்பில் 'சமஷ்டி' என்றோ 'ஐக்கியம்' என்றோ அதிகாரப் பகிர்வு வரையறை செய்யப்படவில்லை.அந்த வகையில் தான் அதிகாரப் பகிர்வை எமது குழு பரிந்துரை செய்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஹெல உறுமய போன்ற கட்சிகள் ஐக்கிய இலங்கை என்ற வரையறையை வலியுறுத்தின. அந்த வரையறைக்குள் தான் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பரவலாக்கமும் பகிர்வும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசிடம் 103 அதிகாரங்களும் மாகாண சபையிடம் 93 அதிகாரங்களும் உள்ள அதேவேளை 14 அதிகாரங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில இருந்தாலும் மாகாண சபை மத்திய அரசின் அனுமதி பெற்றே அதனை அமுல்படுத்த வேண்டியுள்ளது. எமது யோசனையின் படி மத்திய அரசின் அனுமதியின்றி மாகாண சபை தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். மாகாண சபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு மீளப் பெற முடியாது. காணி,பொலிஸ் அதிகாரங்களைப் பொறுத்த வரை இந்தியாவிலுள்ள முறையை மையப்படுத்தினாலும் எமது நாட்டுக்குப் பொருத்தமான வகையிலேயே அது தொடர்பான சிபாரிசு முன் வைக்கப்படும். மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல உள்ளூராட்சி சபைகளுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு அவற்றை பலப்படுத்துவதற்காக 53 அதிகாரங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அதனை மாகாண சபை கூட பறிக்க முடியாது"என்றும் குறிப்பிட்டார். |
26 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக