26 அக்டோபர், 2009

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இரண்டாம் தொகுதியாக மேலும் ஆயிரம் பேரை மீள்குடியமர்த்த நடவடிக்கை




முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக மேலும் ஆயிரம் பேர் திங்களன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“கடந்த 22 ஆம் திகதி 297 குடும்பங்களைச் சேர்ந்த 1027 பேர் துணுக்காய் பகுதிக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் 75 வீதமானோர் தமது காணிகளைத் துப்பரவு செய்து அங்கு மீள்குடியேறியுள்ளார்கள். ஏனையோரும் தமது காணிகளை வெளியாக்கி வீடுகளை அமைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களும் விரைவில் மீளக்குடியமர்ந்துவிடுவார்கள்.

காணிகளைத் துப்பரவு செய்வதற்கான கோடரி கத்தி மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான மரம் தடிகள் கூரைவிரிப்புகள் கூரைத்தகடுகள் போன்றவை மீள்குடியேறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனிஞ்சியன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை பாலிநகர் மகாவித்தியாலயம் மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய 3 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.

வீடுகளுக்குச் சென்றுள்ளவர்களுக்கு உலக உணவுத் திட்டம் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளது. சமையல் பாத்திரம் உள்ளிட்ட வீட்டுப்பாவனைக்குரிய பொருட்களும் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்கள் அங்கேயே சமைத்து உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.

மீளக்குடியமர்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் நீர் வளச் சபையினரும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரும் இணைந்து பொதுக்கிணறுகளையும் காணிகளில் உள்ள கிணறுகளையும் துப்பரவு செய்து அவற்றை அடையாளமிட்டுள்ளார்கள். இந்தப் பிரதேசங்களில் 75 வீதமான கிணறுகள் இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் துப்பரவு செய்யப்பட்டு அடையாளம் இடப்பட்ட கிணறுகளில் இருந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்குரிய குடிநீரைப் பெறுகின்றார்கள்.

இந்த மூன்று பாடசாலைகளிலும் உள்ளவர்கள் தமது காணிகளுக்குச் சென்றதும், அவற்றில் இரண்டாவது தொகுதியான ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உடனடியாகவே மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்”

என தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக