5 அக்டோபர், 2009

மட்டு.வந்த 50 இடம்பெயர் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


இடைத்தங்கல் முகாம்களிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் மட்டக்களப்புக்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அங்குள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்று 50 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கு என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் 127 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இக் குடும்பங்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் சிங்கள மகா வித்தியாலயம் இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அழைத்து வரப்பட்ட ஆரம்ப நாட்களில் பாதுகாப்பு தரப்பினர் இவர்களது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் 2 - 3 நாட்களின் பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 23ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி இன்று சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிலிருந்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலிருந்து17, குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரும் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு பாதுகாப்புடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட 127 குடும்பங்களைக் கொண்ட 367 பேரில் இதுவரை சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேரில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம் முகாமில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குருக்கள்மடம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி 21 குடும்பங்களைக் கொண்ட 45 பேர் தொடர்ந்தும் அந்த இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக