குடும்பிமலைப் பகுதியிலிருந்து 56கிலோ சீ4 ரக வெடிமருந்து உள்ளிட்ட பெருமளவு யுத்த உபகரணங்கள் மீட்பு-
ஆயுதக் கொள்கலனில் வெடிப்புச் சம்பவம்-
மட்டக்களப்பு குடும்பிமலை நாரகமுல்லைப் பகுதியிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த வெடிபொருட்களும் துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். சீ4 ரக வெடிமருந்து 56கிலோகிறாம், ஆர்.பி.ஜி ரக குண்டுகள் 10, ரி56 ரக துப்பாக்கிகள் 71, பலவகையிலான குண்டுகள் 1350 உள்ளிட்ட வெடிபொருட்களே இதன்போது மீட்கப்பட்டதாகவும் நிமால் மெதிவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கொள்கலன் ஒன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவமானது இன்றுமுற்பகல் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தினால் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லையென்றும், இதுபற்றிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக