29 செப்டம்பர், 2009

இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு


மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.

இதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.

இருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

இலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது
அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

- "யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக