29 செப்டம்பர், 2009

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக