27 பிப்ரவரி, 2011

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கோரி 52 ஆயிரம் கையோப்பங்கள் சேகரிப்பு:மன்னிப்பு சபை


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ள தாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

தனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மக்களிடம் இருந்து கையெழுத்துக்களையும் அது சேகரித்து வந்திருந்தது. தற்போது 52,000 கையெழுத்துக்களை சேர்த்துள்ள நிலையில் அதனைக் கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (22) அனைத்துலக மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜேலந்தா பொஸ்ரர் மற்றும் வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் ஆகியோருடன் மேலும் சிலர் ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு திருமலையில் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையே மனோகரன் ஆவார். தமது விண்ணப்பம் தொடர்பில் ஐ.நா விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், உரிய விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில் தமது நடவடிக்கை தொடரும் எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் ஐ.நா. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்தக் கோரிக்கையில் இதுவரை அமெரிக்கா இணையவில்லை என்பதால், அவர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளின்டனுக்கு கடிதங்களை எழுதுமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என வைத்தியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக