5 ஜனவரி, 2011

மின்சார சபையின் செலவை 8450 மில்லியனால் குறைக்க திட்டம் வரவு, செலவு விபரங்களை பகிரங்கப்படுத்த முடிவு


மின்சார சபை நடவடிக்கைகளை செயற்றிறன் மிக்கதாக மாற்றி அதனூடாக இந்த வருடத்தில் மின்சார சபை செலவை 8450 மில்லியன் ரூபாவினால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க நேற்று கூறினார்.

இதனூடாக 2011 ல் எதிர்பார்க்கப்படும் 24.48 பில்லியன் ரூபா நஷ்டத்தை 16 பில்லியன் ரூபாவாகக் குறைக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

2011ஆம் ஆண்டு மின்சார சபையின் செலவுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: மின்சார சபையின் செலவுகள் தொடர்பாக பல்வேறுபட்ட தவறான கருத்துகள் கூறப்படுகின்றன.

அதனால் மின்சார சபையின் வரவு செலவு விபரங்களை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் மின்சார சபை செலவு விபரங்களை மக்களுக்கு வெளியிட உள்ளோம். இதன் மூலம் மக்கள் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

2011ல் மின்சார சபையின் மொத்தச் செலவு 158.982 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கும், எரிபொருள் கொள்வனவு செய்யவும் மாத்திரம் 105 பில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மின்சார சபையினால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் இந்த வருடத்தில் சகல ஊழியர்களின் ஒத்துழைப்புடன் செயற்திறனை மேம்படுத்தி செலவை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும், அதன் கிளைகள், உற்பத்தி நிலையங்கள் அனைத்துக்கும் இலக்குகள் வழங்கப் படவிருக்கின்றன. இதனூடாக எதிர்பார்க்கும் செலவை குறைக்க உள்ளோம்.

மின் கட்டண உயர்வின் மூலம் மாத்திரம் 4.5 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். ஆனால் இவ்வருட வருமானமாக 130 பில்லியன் ரூபா கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேநேரம் மின்சாரத்தை திருட்டாகப் பெற்றவர்களிடமிருந்து அபராதம் மற்றும் மின்சார சபையின் சொத்துக்களின் பயன்பாடு மூலம் 4500 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கும் என்றும் நம்புகிறோம். இதன் மூலம் இவ்வருடம் மின்சார சபை முகம் கொடுக்கும் நஷ்டத்தில் 1/5 பங்கையே ஈடுசெய்ய முடியும்.

எமக்கு வழங்கப்படும் எரிபொருள் விலை லீட்டருக்கு 24 ரூபாவில் இருந்து 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. வீதி விளக்குகளால் வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இதற்காக திறைசேரியினால் 940 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது.

சிறு மின் உற்பத்தி நிலையங்களினூடாக மொத்த மின்சாரத் தேவையில் 6 வீத மின்சாரத்தை பெற திட்டமிட்டுள்ளோம். இதற்காக 8.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2009ல் ஒரு அலகு மின்சாரம் பெற 27 ரூபா வழங்கப்பட்ட போதும் இந்த வருடத்தில் 19 ரூபாவே வழங்க உள் ளோம். சிறு மின் உற்பத்திக்கு அதிக நிதி செலவிடுவதாக தெரிவிக்கப் படும்

குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இந்த வருடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தியும் தேசிய மின் கட்டமைப்புக்கு இணைக்கப்படவுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக