10 ஏப்ரல், 2010

மோசடிகளும் வன்முறைகளுமே வாக்களிப்பு வீதம் குறையக் காரணம் : திஸ்ஸ அத்தநாயக்க

நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு அரசாங்கத்தின் தேர்தல் மோசடிகளும் வன்முறைகளுமே பிரதான காரணமாக அமைந்தன. தேர்தல் முடிவுகளை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி இன்று அறிவிக்கும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் குறிப்பிட்டளவு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதற்கான காரணிகளை இனங்கண்டு தேவைப்படின் கட்சியில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய வழிமுறைகளையும் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழமை போலவே அரசாங்கத்தின் வன்முறைகளும் மோசடிகளும் எதிர்க்கட்சிகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதனாலேயே ஆரம்பத்திலிருந்து நாடாளுமன்றத் தேர்தல் சுயாதீனமாக நடைபெறாது என நாம் கூறியிருந்தோம்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கவோ, தேர்தல் சட்டங்களை மதிக்கவோ, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பொது மக்களின் வாக்குரிமைகளை மீறியே தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதனால் பொது மக்கள் தேர்தல் மீது நம்பிக்கை வைக்கவில்லை. தேர்தல் சுயாதீனமாக நடைபெறாத பட்சத்தில் அதன் நம்பகத் தன்மை குறைந்தே காணப்படும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதித் தேர்தலை விட பாரிய வாக்கு வீழ்ச்சியை அரசாங்கம் சந்தித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சியின் தலையீடுகளால் தன்னால் நியாயமான முறையில் செயற்பட முடியாமல் போனது எனத் தேர்தல்கள் ஆணையாளர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். ஏட்டில் உள்ள அதிகாரங்களை தேர்தல்கள் ஆணையாளர் செயற்படுத்த விடாமல் அரசாங்கம் தலையீடு செய்து வந்தது.

நாவலப்பிட்டி, வன்னி, மெனிக் பாம் மற்றும் வாழைச்சேனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்.

தேர்தல்கள் ஆணையாளரின் சுயாதீனமான செயற்பாடுகளுக்குத் தடைகள் ஏற்படுமாயின் அதற்கு எதிராக ஆணையாளரினால் சட்ட உதவியை நாட முடியும். ஆனால் தேர்தல்கள் ஆணையாளர் ஆரம்பத்திலிருந்தே வெறும் கட்டளைகளைப் பிறப்பிப்பதிலேயே இருந்து விட்டார்.

எவ்வாறாயினும் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எம்மால் எதுவும் கூற முடியாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக