5 செப்டம்பர், 2010

விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்




மகஸின் சிறைச்சாலையில் 5 தொடக்கம் 17 வருடங்களாகச் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் எங்கள் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் அதுபற்றிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ""ஐயா இத்தனை வருட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனதில் அடக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் வாழ்ந்து வரும் எங்களை அனைவரையும் சந்தித்து கலந்துரையாடி சென்றனர்.

மனதில் ஓரளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி நீங்கள் எங்களை சந்திக்கவில்லை என்ற கவலை தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்கள் அனைவர் மனதிலும் உண்டு. ஆனால் எதிர்வரும் சிறைச்சாலைகள் தினத்தில் சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை பார்வையிடப் போவதாக ஊடகங்களில் தகவல் தெரிவித்திருப்பதானது கைதிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான எங்களை நீங்கள் ஒரு முறையாவது வந்து பார்த்து எங்கள் கஷ்ட நிலைவரங்களை கேட்டறிந்தால் அனைவரது குடும்ப நிலைவரங்கள் மட்டுமின்றி எங்கள் துயரங்களையும் மன வேதனைகளையும் அறிந்து கொள்ள முடியும். சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நாங்கள் கண்ணீருடன் பல கடிதங்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தும் எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்நாளின் அரைவாசி காலத்தினை சிறைக் கூடத்திலேயே கழித்து விட்டோம். இனியாவது வெளியுலகத்தில் வாழ வழியேற்படுத்தி தாருங்கள்.

ஐயா, எங்களை விடுதலை செய்யுமாறு கெஞ்சி கேட்கிறோம். நாங்கள் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கிடையாதா? நாங்கள் வாழ்வதற்கு அருகதையற்றவர்களா? உங்கள் ஒருவரால் தான் எங்களுக்கு விடிவைத் தேடித் தர முடியும். அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கம்பிக் கூண்டுக்குள் இத்தனை வருடங்களாக இருக்கும் எங்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள். ஐயா, இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகள். எங்களுக்கு புது வாழ்வளிப்பீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கிறோம் என்றுள்ளது.

நன்றி
இப்படிக்கு

தமிழ் அரசியல் கைதிகள்
எ. ஏ. ஒ. பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக