4 ஜூன், 2010

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அரசின் செயற்பாடு-ஐ.தே.க

வாழ்க்கைச் செலவு சுமைக்கு வழி தேடாது வாகனங்களுக்கான வரிகளை குறைப்பதாக கூறுகின்ற அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைந்துள்ளதுடன் அதன் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றது என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

சொகுசுப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை அதிகரிப்பதன் ஊடாக அரசாங்கம் வரிகளின் சமநிலையைப் பேணும் நோக்கில் வஞ்சகமான பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. சாதாரண மக்களுக்கு துரோகமிழைக்கின்ற எந்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. சம்பள அதிகரிப்பு மற்றும் விலைவாசி குறைப்பு போன்றவற்றை மேற்கொள்வதாகவும் தொடர்ந்தும் கூறி வந்தது.

ஆனாலும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மறுபுறத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரித்ததன் மூலம் ஏனைய மா உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. அது மட்டுமல்லாமல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்து மக்களின் தலையில் பாரிய சுமையொன்று தூக்கி வைக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் தான் வாகனங்களுக்கான வரிகளைக் குறைத்திருப்பதாக கூறுகின்றது. அதி சொகுசு வாகனங்களின் வரிகளைக் குறைத்து அதிகமான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஊக்குவிக்கின்ற அரசாங்கம்ல சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையை ஏன் சிந்தித்துப் பார்க்கத் தவறியது என்று கேட்க விரும்புகிறோம். இந் நிலையில் அடுத்த வாரமளவில் பால்மாவின் விலைகளும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எரிபொருள் விலை குறைப்பு விடயத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதறித் தள்ளிவிட்டு அதற்காக பலவித காரணங்களைக் கூறிய அரசாங்கம், தற்போது வாகன வரிகளை குறைத்திருப்பதாகக் கூறி அதற்கு பல காரணங்களைக் கூறுகின்றது.

இன்றைய ஆட்சியாளர்களின் தில்லுமுல்லுகளை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்பட்சத்தில் அதனிடம் அரசாங்கம் சரணடைந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அந்த நிதியம் இலங்கைக்கு கடன் கொடுக்க வேண்டுமெனில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் காட்ட வேண்டியது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாகும். அந்த நிபந்தனையின் பிரகாரமே அரசாங்கத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது.பணம் படைத்தவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்ற அதேவேளை அரசின் வருமானமும் அதிகரிக்கின்றது. வாகன வரிகளைக் குறைத்து அதனை ஈடு செய்வதற்காக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. பசி, பட்டினிக்கான நிவாரணம் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் சிறந்த நிர்வாகம் இல்லாததால் அதன் பொருளாதாரக் கொள்கையும் ஸ்திரத் தன்மையை இழந்து வருகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக