7 பிப்ரவரி, 2010

ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது-


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்றுமாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிராந்திய செய்தியாளர்களுக்கான குருநாகல் நகரில் தமிழ் மொழிமூல பாடநெறி-

குருநாகல் மாவட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கான பாடநெறியொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக குருநாகல் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். குருநாகல் வைத்தியசாலை சுகாதார அபிவிருத்திப் பிரிவினருடன் இணைந்தே இந்தப் பாடநெறி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி தகவல் தொழில்நுட்பம், புகைப்படம் எடுத்தல், நடிப்புத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்போது பயிற்றுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பாடநெறி முழுமையாக தமிழ் மொழியில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளமன்றத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானம்-

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. மலையக மக்களின் எதிர்கால நலன்கருதியும், அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டும் அரசதரப்புடன் இணைந்து போட்டியிடுவதெனத் தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவரும் தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும், மக்களின் எதிர்கால நன்மைகருதி அரசுடன் இணைந்து களமிறங்குவதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

உட்கட்டுமான பணிகளை முன்னெடுக்க சீனா 350மில்லியன் டொலர் நிதியுதவி-

இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரான உட்கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு, 350மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா நிதியதவியாக வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி கூ ஜின்ரா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திரதினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் எங்களின் நல்ல பங் காளிகள். அந்த நாட்டுடன் அடுத்த வருடங் களில் உறவுகளை அதிகரிக்கவுள்ளோம். இலங்கையின் வளர்ச்சிக்கு சகல விதமான ஒத்துழைப்பையும் சீனா வழங்கும். யுத்தகாலத்தில் சேதமடைந்த வீதிகள் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை புனரமைக்க 350மில்லியன் அமெரிக்க டொலர் களை வழங்கவிருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு 6.1கோடி அமெரிக்க டொலர்களை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளதெனவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடு-


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரஸ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவை நாளையதினம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை பிற்பகலில் இடம்பெறுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்போது 300மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையில் இருநாடுகளின் தலைவர்களும் கைச்சாத்திடவுள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் ரஸ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறவுள்ள சுதந்தினதின வைபவத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக