20 பிப்ரவரி, 2010

அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி





அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி
திரைப்படம் திரைப்படம்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வடக்கு வரிசிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தலிபான் தலைவர்களின் ஒருவரான ஜமாலுதீன் ஹக்கானி குருப்பை சேர்ந்த வர்கள் பாஸ்டன் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் அங்கு 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தலிபான்களின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் முகமத் ஹக்கானியும் ஒருவன் என்று தெரியவந்துள்ளது.

இவன் அல்- கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்து இருக்கிறான். இவன் தலிபான் தீவிரவாத இயக்கத்தில் 2-வது கட்ட தலைவராக செயல்பட்டு வந்தான்.

தனது அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியின் தலைமையின் கீழ் கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தான். தலிபான்களின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் 2 முக்கிய தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் கொன்றுள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முகமது ஹக்கானியின் அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியையும் கொல்ல அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.



சரத் கைது : கிரிபாவ பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள குருணாகல் கிரிபாவ பிரதேசசபையில், ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கிரிபாவ பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி. குணரட்ண தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து இந்தப் பிரேரணையை எவ்வித விவாதங்களும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றின.



நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் : அனோமா பொன்சேகா





ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டைக் கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது விடுதலைக்காக சட்டத்துடன் போராடும் அதேசமயம், ஆலயங்களை நாடி பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வேறு வழி கிடையாது. ஏனென்றால் இன்று இலங்கையில் மிக மோசமான குடும்ப ஆட்சி மேலோங்கியுள்ளது" என்றார்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் கூறுகையில்,

"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் வன்முறைச் சூழலில் பாதுகாப்புகள் பறிக்கப்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆனால், அரசாங்க வேட்பாளர்களுக்குச் சகல பாதுகாப்புகளும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான நிலையாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் ஜனநாயக முறையில் நடைபெறாது. எதிர்க்கட்சிகள் மிக மோசமான வன்முறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக