17 பிப்ரவரி, 2010

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை-


வீ.ஆனந்தசங்கரி- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவுமில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடக் கூடிய சாத்தியம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டால் அது வரவேற்கக்கத்தக்கது எனவும் கட்சியின் எம்.பி சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆனந்தசங்கரி கூறியுள்ளார். யுத்தகாலத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் அழிவுகளை எதிர்நோக்கியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளிகளாவர். புலிகள் மனிதக் கேடயமாக பொதுமக்களை பயன்படுத்தியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை தட்டிக்கேட்கத் தவறியது. வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்றும் ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் எம்.பிக்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை


-புதிய இடதுசாரி முன்னணி- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடுமுழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்குகிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகப கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாம் மேலும் தமிழ் உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இதுவரை நாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின் தமது தீர்மானம் குறித்த கருத்தினை வெளியிடுவதாக முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது-


சட்ட மாஅதிபர்- ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். போதுமானளவு ஆதாரங்கள் திரட்டப்பட்டதன் பின்னர், சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். படைகளைச் சேர்ந்த 03 உயரதிகாரிகளினால் இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இவர்களை இராணுவத்தளபதி நியமிப்பார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சரியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். இராணுவ நீதிமன்றில் இராணுவத்தினருக்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும், தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்காது எனவுமத் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகா வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது கடமையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற அதிக எண்ணிக்கையிலான உயர்பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட அணித்தலைவர்கள் வேட்புமனுக்களில் கையொப்பம்-


பொதுத்தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட அணித்தலைவர்கள் நேற்று சுபநேரத்தில் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். 19 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் மற்றும் உபதலைவர்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னணிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று காலை 10.45 மணிக்கு கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர்கள் சகலரும் வேட்புமனுக்களில் நேற்றைய தினமே கையொப்பமிட்டுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் அணித்தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வெளிநாடொன்றிற்கு விஜயம் செய்திருப்பதனால் கம்பஹா மாவட்ட வேட்புமனு நேற்றையதினம் கையொப்பமிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் யாவும் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாட்களில் தனித்தனியாக சிரேஷ்ட அமைச்சர்களின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணி அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிவீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டி-


இலங்கை கிரிக்கெட் அணிவீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத்பொன்சேகா குற்றமற்றவர் என்பதனை நிரூபிப்பதற்கு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார்-


ரில்வின் சில்வா- ஜெனரல் சரத்பொன்சேகா குற்றமற்றவர் என்பதனை நிரூபிப்பதற்கு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் சிரேஸ்ட அரசியல் தலைவர்களின்மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க அரசாங்கம் முனைவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கூட்டுப்படைகளின் பிரதான அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் எவ்வித விடயங்கள் பற்றியும் தம்முடன் கலந்தாலோசிக்கவில்லை. அமெரிக்காவில் சரத் பொன்சேகாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் கட்சி என்ற ரீதியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தவிர, தனிப்பட்ட ரீதியில் எவ்வித கருத்துக்களும் கட்சித் தலைவர்களுடனோ அல்லது தம்முடனோ சரத் பொன்சேகா பரிமாறிக்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி முன்னணி இடதுசாரி விடுதலை முன்னணி என்ற பெயரில் போட்டி-


கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி இம்முறை பொதுத்தேர்தலில் இடதுசாரி விடுதலை முன்னணி என்ற பெயரில் நாடுமுழுவதும் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இம்முன்னணியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமல் ஜயநித்தி மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி விடுதலை முன்னணி ஊடாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதோடு அதற்கான பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் வடக்கு, கிழக்கில் போட்டியிடுவார்கள். அத்தோடு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்கவுள்ளோம். நாம் என்றும் சிறுபான்மை இன மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவும் குரல்கொடுத்து வந்துள்ளோம். இந்தக் குரல் பாராளுமன்றத்திலும் ஒலிக்கவேண்டும். மக்கள் உரிமைகளைப் பெறவேண்டும். எனவே நிச்சயம் எமக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முற்றுமுழுதாக ஜனநாயகரீதியில் இடம்பெறவில்லை-



பொதுநலவாய நாடுகளின் குழு அறிக்கை- கடந்தமாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முற்றுமுழுதாக ஜனநாயகரீதியில் இடம்பெறவில்லை என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின்குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இக்குழுவின் பொதுச்செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில், தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை. எனத் தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார். இவை குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும்பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது. வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக