29 ஜனவரி, 2010

27.01.2010 தாயகக்குரல்

உலகமே உன்னிப்பாக உற்று நோக்கிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தல் குறித்து செய்தி ஊடகங்கள் பல பலவிதமான ஊகங்களை தெரிவித்து வந்தன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவும் அதனால் சரத் பொன்சேகாவே வெற்றிபெறுவார் எனவும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன.


யார் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதானாலும் 51 வீதத்துக்கு குறைவான வாக்குகளையே பெறுவர் என்ற கருத்துக்களும் பரவலாக தெரிவிக்கப்பட்டன. எவருக்கும் 50 வீதம் வாக்குகள் கிடைக்காமல் இரண்டாவது விருப்பு வாக்குகளிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும் எனவும் சிலர் தெரிவித்திருந்தனர்.


இவர்களுடைய ஊகங்கள் எல்லாவற்றையும் பொய்யாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 57.88 வீதமான வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாகவும் ஜனாதியாக தெரிவாகியுள்ளார். பொதுவாக சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் கடுமையான போட்டி நிலவுவதாக அபிப்பிராயம் நிலவியபோதிலும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்மூலம் மகிந்தாவின் வெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தனர்.


ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 ஆக இருந்தால் தனது வெற்றி உறுதியானது என சரத் பொன்சேகா நம்பிக்கை தெரிவித்திருந்தார். கடந்த காலங்களைவிட இந்த தேர்தலில் 70 விதமான மக்கள் வாக்களித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது, அதே வேளை எதிர்பார்த்தளவுக்கு வன்முறை சம்பவங்கள் இடம்பெறவில்லை. வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.


2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளை (50.29மூ) பெற்று வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ 2010 ஜனாதிபதி தேர்தலில் 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் (57.88மூ) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா 47லட்சத்து 06ஆயிரத்து 366 வாக்குகளை( (48.43
மூ) பெற்றிருந்தார். 2010 தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத்பொன்சேகா 41லட்சத்து 73ஆயிரத்து 185 வாக்குகளையே (40.15மூ) பெற்றுள்ளார்.


ஆட்சி மாற்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் குடும்ப ஆட்சியை ஒழித்தல், நாட்டில் ஜனநாயகத்தை கொண்டுவருதல் என்ற கோஷங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சரத் பொன்சேகா பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் இவையனைத்தையும் சிங்கள மக்கள் பெரும்பான்மையால் நிராகரித்துவிட்டனர்.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் பிரதானமானதாக கருதப்படுகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது, நாட்டின் அபிவிருத்தி என்பன தொடர்பாக மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே சரத் பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.


இந்த தேர்தல் யுத்தம் முடிந்த பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதுடன் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலாகும். இருந்தும் வடக்கில் 15
மூ மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
தமிழ் தலைவர்கள் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் மக்கள் வாக்களிப்பதில் அக்கறை கொள்ளவில்லை என்றால் அது தமிழ்; தலைவர்களின் கட்டுப்பாட்டில் மக்கள் இல்லை என்பதுதான் அர்த்தமாகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த எச்சரிக்கையை தமிழ் தலைவர்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் கவனத்தில் கோள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக