10 அக்டோபர், 2009


10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்றுஇலங்கை வருகை

டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

இன்று திருமலை, மட்டு விஜயம் ஜனாதிபதியையும் சந்திக்க ஏற்பாடு

இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர்.

இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர்.

அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர்.

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக