27 நவம்பர், 2009

புத்தளவை அண்மித்த பகுதியில் எம்.ஐ.-24 ஹெலிகொப்டர் விபத்து
பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ-24 ஹெலிகொப்டர் ஒன்று, இன்று பிற்பகலில் புத்தள எனும் இடத்தை அண்மிக்க 5 கிலோ மீட்டர் இருக்கும் வேளை, இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சேத விபரங்கள் பற்றி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
  1. பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது : பிரிட்டன் கோரிக்கை


ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு பெறுமதிமிக்க ஒன்று எனத் தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டமை காரணமாகவே இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையைத் தான் முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜதந்திர தரப்புகளின் தகவல்களின்படி, இலங்கையின் இந்த மாநாட்டை நடத்தக்கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பொதுமக்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. இதன் போது பொதுமக்களின் பாதிப்புகளைக் குறைக்குமாறும் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்தை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரிக்குமாறும், பிரித்தானியா கோரிக்கையை முன்வைத்திருந்தது.

எனினும் அதனை, இலங்கை அரசாங்கம் ஏற்று செயற்படவில்லை என்பதே கோடன் பிரவுணின் குற்றச்சாட்டாக உள்ளது
ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடரணி வாகனங்களை பலவந்தமாக அகற்ற முயற்சி - பேச்சாளர் மறுப்பு


முன்னாள் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடரணி வாகனங்களை பலவந்தமாக எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும் ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எக்காரணம் கொண்டும் அகற்றப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

எது எவ்வாறெனினும் பாதுகாப்பு வாகனங்களையும் மெய்ப்பாதுகாவலர்களையும் பலவந்தமாக அகற்றுவதான முயற்சியானது சட்டவிரோதமானது என்று ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் அறிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது தங்கியுள்ள 'ஜெனரால் இல்லத்துக்கு' நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இராணுவ அதிகாரிகள் அறுவர் உள்ளடங்களாக சுமார் 56 இராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற அவர்கள் ஜெனரலின் வீட்டின் முன்னாள் நின்றிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரலின் பாதுகாப்பு தொடரணியைச் சேர்ந்த வாகனங்களையும் பலவந்தமான முறையில் எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர்.

இந்நிலையில் அவ்விடத்துக்கு வந்த ஜெனரல் சரத் பொன்சேகா, "யாருடைய உத்தரவின் பேரில் குறித்த பாதுகாப்பு வாகனங்களை இங்கிருந்து அகற்ற முயற்சிக்கின்றீர்கள்?" என்று அங்கு வந்த இராணுவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. அத்துடன், "ஒரு வீட்டுக்கு இரவில் வரும் போது சட்டமறிந்து செயற்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?" என்றும் ஜெனரல் பொன்சேகா கேட்டதாகவும் அவரது அலுவலகம் கூறியது.

இதன்போது, தாம் பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவுக்கமையவே இங்கு வந்ததாகவும் அந்த உத்தரவினை நிறைவேற்ற இடமளிக்குமாறும் இராணுவ அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மீண்டும் உரையாடியுள்ள ஜெனரல் பொன்சேகா, இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அதனால் பாதுகாப்பு வாகனங்களையோ அல்லது தனது மெய்ப்பாதுகாவலர்களையோ இங்கிருந்து அகற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், வந்த வழியில் அனைவரையும் திரும்பிச் செல்லுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்றும் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் மேலும் கூறியது.

பேச்சாளர் மறுப்பு

மேற்படி சம்பவம் தொடர்பில் மறுப்பினைத் தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கமாண்டோ அதிகாரியொருவர், படை வீரர்கள் 20பேர், சிங்க ரெஜிமண்டைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர், அதே ரெஜிமண்டைச் சேர்ந்த வீரர்கள் 70பேர், இராணுவ வீராங்கனைகள் ஐவர் மற்றும் சாரதிகள் 10 பேரை தமது பாதுகாப்புகாப்புக்காக வழங்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க குறித்த இராணுவ வீராங்கனைகள் ஐவர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் அவருடைய பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டனர். அத்துடன் அவர் குறித்த கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குண்டு துளைக்காத கார் 01, லாண்ட் ரோவர் ஜீப்கள் 03, வான் 01, பார ஊர்தி 01 மற்றும் பஸ் போன்ற வாகனங்களும் அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு மேலதிகமாக பலவந்தமான முறையிலும் சில பாதுகாப்பு அதிகாரிகளை அவரே நியமித்துள்ளார். அந்தவகையில் கமாண்டோ அதிகாரிகள் நால்வர், 24 படை வீரர்கள், நிர்வாக மற்றும் சமிக்ஞை அதிகாரிகள் மூவர், அதே பிரிவைச் சேர்ந்த படையினர் 17பேர், சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 55பேர், வைத்திய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 7பேர் போன்றோரும் கார்கள் 03, லாண்ட் ரோவர் ஜீப்கள் 07, டபள் கெப் ரக வாகனம் 01, வான்கள் 04, அம்புலன்ஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் 09 மற்றும் பஸ் போன்ற வாகனங்களையும் மேலதிகமாக வைத்துக்கொண்டுள்ளார்" என்றார்.
திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி அமெ.ஜனாதிபதி ஒபாமா கடிதம்




சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அலரி மாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்னொரு போது என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திஸ்ஸ நாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கோணவெல சுனிலுக்கு பிணை கொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்" என்று கூறினார்
வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்;


வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது;

"மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இன்று அந்த மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஊடகங்கள் உதவ வேண்டும். எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் வீடொன்றை கட்டினால் அதனை நானோ அல்லது பஷில் ராஜபக்ஷவோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவோ கட்டுவதாகவே சேறுபூசப்படுகின்றது.

தேர்தலில் சாதகமான பிரசார நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவுள்ளோம். நாட்டை ஒற்றுமைப்படுத்திய நாம் அதனை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

முப்படைத் தளபதிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடனேயே யுத்தத்தில் வெற்றி பெற்றோம். இதில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தால் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கு முடியாது. யுத்த வெற்றியானது சகலரதும் வெற்றியாகும். இது ஒருவரது வெற்றியல்ல.

யுத்தம், பொருளாதாரம், அபிவிருத்தி என்பவற்றுக்கு நான் தலைமைத்துவம் கொடுத்தேன். இவற்றை நான் மட்டும் செய்ததாக கூறவில்லை.

கேள்வி: கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை வெற்றி கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள். இம்முறை மக்களுக்கு உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எத்தகைய வாக்குறுதிகளை வழங்கப் போகின்றீர்கள்?

பதில்: இம்முறை நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கேள்வி: அரசாங்கத்தில் அமைச்சரவை மிகவும் பெரிதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் வென்ற பின்னர் அமைச்சரவையைg குறைக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: அரசாங்கத்தின் அமைச்சரவை பெரியதென்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தை மட்டுமே பெறுகின்றனர். வாகனம், பாதுகாப்பு, அதிகாரம் என்பவை மட்டும்தான் அமைச்சர்களிடம் காணப்படுகின்றன.

உறுதியான அரசாங்கம் இருந்திருந்தால் இவ்வாறு அமைச்சரவையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது. எமது அரசாங்கத்தில் சபாநாயகரை கூட நாம் தெரிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் எமது ஒரே குறிக்கோளான நாட்டை ஒன்றுபடுத்துவதற்காக நாம் யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டோம்.

யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதில் நாம் வெற்றி பெறாவிடில் எதிரணியினர் என்மீது குற்றச்சாட்டினை சுமத்தியிருப்பர். சகோதரர்களுடன் இணைந்து யுத்தத்தில் தோல்வி கண்டுவிட்டதாக என்மீது குற்றஞ்சாட்டியிருப்பர். இதற்கெல்லம் தயாராகவே நான் யுத்தத்தில் ஈடுபட்டேன்.

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அரசாங்கம் ஸ்திரமானதாக இல்லாமையினாலேயே பிரதான குறிக்கோளை அடைவதற்காக அமைச்சரவையினை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கேள்வி: ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்கின்றேன். இத்தகைய சம்பவங்களுடன் இராணுவம் அல்லது பொலிஸாரை குற்றஞ்சாட்டுவது முறையல்ல.

இச்சம்பவங்களுடன் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை பரிசீலிப்பிதற்கு விசேட குழுவை நியமித்துள்ளேன். விசாரணையின் பின்னர் யாராவது இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் உங்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். நாட்டை ஆதரிக்கும் பிரிவினர் நாட்டுக்கு எதிராக செயற்படும் பிரிவினர் என இரண்டு பிரிவாகவே நான் மக்களை பார்க்கிறேன்.

நாட்டிலுள்ள யாருக்காவது பிரச்சினை இருந்தால் அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தயாராகவே இருக்கின்றேன்.

இடம்பெயர்ந்த மக்களை சிறைச்சாலைகளுக்குள் வைத்துக் கொண்டு வாக்குகளை பலவந்தமாக நாம் பெறப்போவதாக கூறியவர்கள் இவர்களேயாவர்.

இத்தகையவர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. வடகில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மக்கள், இராணுவத்தினரைக் கூட கண்டதில்லை. வெளிநாடுகளில் இலங்கையை காணத எமது சந்ததியினர் போல் இவர்களும் இங்கிருந்தனர். தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள் என்ற மனநிலை அவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்தது.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா?

பதில்: நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம்தான்.

கேள்வி: முன்னாள் கூட்டுப்படை தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆயுத இறக்குமதியில் ஊழலில் ஈடுபட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா?

பதில்: ஊழல் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீனமான நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், இத்தகைய ஊழல் நடைபெற்றதா என்பது குறித்து எனக்கு தெரியாது. நாம் அது குறித்து விசாரிக்க வேண்டும். எனது மகனின் பெயரில் நிறுவனம் ஒன்றை வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு கேள்விப் பத்திரங்களை நான் வழங்க முடியாது.

இது குறித்து பரிசீலித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் தளபதி மீது விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்புசெயலாளருக்கும் உரிமை இல்லை. இதற்கென சுயாதீன நிறுவனம் ஒன்று உள்ளது. கேள்வி: வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக் கூறுகின்றீர்கள். இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

பதில்: வாக்களிப்பதற்கு தகுதியிருந்தால் வாக்களிக்கலாம். கூடிய வரையில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவோம். புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் இருந்தபடி கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். இவ்வாறு மக்கள் வாக்குகளை அளிக்க முடியும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 20 இலட்சம் மக்கள் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிப்பதற்கு அடையாள அட்டை அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளீர்கள்? பதில்: ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் நீங்களா அல்லது சரத் பொன்சேகாவா பொது வேட்பாளர்?

பதில்: பொது வேட்பாளர் நான் தான். 28 கட்சிகள் என்னை ஆதரிக்கின்றன.

கேள்வி: மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா?

பதில்: அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன.

கேள்வி: பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தினை நடத்துவதற்காக சகோதரரை பாதுகாப்பு செயலாளராகவும் இராணுவ, விமானப்படை, கடற்படை தளபதிகளை புதிதாகவும் நீங்கள் நியமித்திருந்தீர்கள். இவர்களில் எவரையாவது இப்பதவிக்கு நியமித்தமை குறித்து தற்போது கவலையடைகின்றீர்களா?

பதில்: பல உபதேசங்களை வழங்கி யுத்தத்திற்கு நான் தலைமைத்துவம் வழங்கினேன்.

கேள்வி: சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாமை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன சுயாதீனமானவையாக இல்லை. இந்தக் குழுக்களுக்கு பிரதமர் ஒருவரையும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரையும் அமைச்சர் தொண்டமான் ஒருவரையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரையும் நியமிக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறாயின் இதில் எத்தகைய சுயாதீனம் காணப்படுகின்றது. எனவே, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவை சுயாதீனமாக அமைய வேண்டும்
வெற்றிநிச்சயமாகும் வீதத்தை கூறமுடியாது -அரசாங்கம் அறிவிப்பு



மஹிந்த ராஜபக்ஷவே பொது வேட்பாளர். அவருக்கு சமாந்தரமான வேட்பாளர் எவரும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் சவாலும் இல்லை என்று ஊடக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனõதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருக்கின்றார். அதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஆதரவளிக்கின்றனர் இந்த நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

பொது வேட்பாளர் எம்மிடமே இருக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கின்ற கட்சிகள் இருக்கின்ற பெரிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகும் .ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாந்தரமான வேட்பாளர் இல்லை எந்த சவாலும் இல்லை, வெற்றி நிச்சயம் ஆனால் வீதத்தை கூறமுடியாது.ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனையில் மீதமிருக்கின்ற வேலைத்திட்டங்களே கொள்கையை முன்னெடுக்கப்படவிருக்கின்றது புலிகளை அழித்தொழித்த கட்சி மட்டுமல்லாது நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுசெல்கின்ற கட்சியாகும் இந்நிலையில் ஆணைக்குழுக்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக நடைபெறும்.

சட்டரீதியில் தேர்தல் நடத்தப்படல்வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவரும் எம்.பியுமான கருஜயசூரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் வாக்களிக்காத சுயாதீன நபர், வாக்களிப்பிற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டமையினால் கடந்த தேர்தல்களில் பெருந்தொகையான வாக்குகளை இழந்துவிட்டோம்.

அவர் எம்முடன் இருக்கும் போதும் தேர்தல்கள் நடத்தப்பட்டன அதன் போது ஒன்றுமே பேசவில்லை எனினும் தூக்கத்தில் கதைப்பதை போல ஆணைக்குழுக்களை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிராமிய,நகர உரிமைகள் யாவும் பறிபோய் விட்டன . அக்கட்சி பாதாள குழிக்குள் இழுத்துச்செல்லப்படுகின்ற நிலையில் கட்சி உறுப்பினர்கள் விரைவில் எம்முடன் இணைவார்கள் என்றார்

50 பேரை விரட்டி கடித்த குதிரை அடித்துக் கொலை


Swine Flu

கோபி : ஈரோடு மாவட்டம், கோபி பஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் வெறிபிடித்த நிலையில் திரிந்த பெண் குதிரை, திடீரென மக்களை விரட்டி கடித்தது. பலர் காயமடைந்தனர். மக்கள் அலறி ஓடினர். அங்கும் இங்கும் ஓடிய குதிரை அப்பகுதியில் இருந்த பூக்கடைகளை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்களும், அப்பகுதியில் இருந்தவர்களும் தடி, கற்களால் குதிரையை விரட்டினர்.

பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய குதிரை, சாலையில் நடந்து சென்றவர்களையும், பைக்கில் சென்றவர்களையும் விரட்டி கடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்தனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் நீண்ட கயிறுகளை எடுத்து வந்து குதிரையின் கழுத்து, கால்களில் கயிற்றை வீசி குதிரையை கீழே சாய்த்தனர். பின்னர், எல்லோரும் தடிகளால் சரமாரியாக குதிரையை அடித்தனர். இதில் குதிரை இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிகளில் விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது, வனத்துறைக்கு தகவல் கொடுப்பதே வழக்கம். புளூகிராஸ் அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டால் கூட, அவர்களே போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து வரவழைப்பார்கள். அப்படி செய்யாமல், மக்களே குதிரையை அடித்து கொன்றதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

செவ்வாய் கிரகத்தில் கடல்கள்


செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல்கள் இருந்தன என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் முன் பகுதியில் கடல்கள் இருந்திருக்க வேண்டும்.

அதற்கான பள்ளங்கள் உள்ளன. கடல் இருந்ததால் இங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த தகவலை வடக்கு இலினோயிஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்

அநுர பிரியதர்ஷன யாப்பா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.

எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது.

அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Thursday, November 26, 2009

புலிகளின் சினிமா டைரக்டர் சீமான் கனடாவில் கைது!


புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கனடாவுக்கு வந்திருந்த தமிழக சினிமா டைரக்டர் சீமான் கனேடிய புலனாய்வு பொலிஸாரால் நேற்று முன்தினம் மாலை(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கனேடிய தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதிமறியல் போராட்டங்கள் எல்லாமே தோல்விகண்ட நிலையில் தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கைவிட்டுள்ள நிலையில், புலியை கூறி பிழைப்பு நடாத்தும் கூட்டம் ஒன்று தொடர்ந்தும் கனேடிய தமிழ்மக்களை ஏமாற்றலாம் என்ற ரீதியில் மீண்டும் பிழைப்பு தேடி மாவீரர் கொண்டாட்டத்திற்கு சினிமா டைரக்டரை அழைத்தது.

தாயகத்தின் உண்மை நிலை தெரியாது இந்தியாவில் இருந்து கொண்டு வெளிநாட்டு புலிகளின் பணத்தில் உயிர் வாழும் சீமான் போன்றவர்கள். வெளிநாட்டு புலிகளின் வியாபாரத்தை பெருக்குவதற்காக அழைக்கப்பட்டு “மாவீரர்தின சினிமா” தயாரிக்கப்பட்டபோதே கனேடிய சட்டம் தனது கைவரிசை காண்பித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை (புதன்கிழமை) ஆர்.சி.எம்.பி. பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சீமான் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டமை, சட்ட விதிகளை மீறி உரையாற்றியமை போன்றவற்றினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானவர்களை அழைத்து கனடாவில் உள்ள புலிகள் பிழைப்பு மேற்கொள்வார்கள் என்றும், மாவீரர்தினத்தை கொச்சைப்படுத்தாதீர் என்ற தலைப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புளொட் இயக்கத்தினர் விடுத்துள்ள துண்டுபிரசுரத்தில் தெரிவித்தமை போன்று இந்திய பிழைப்புவாதிகளை அழைத்து கனேடிய புலி பினாமிகள் வியாபாரம் மேற்கொள்ள முயன்ற முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இலட்சக்கணக்கான ஈழ தமிழ்மக்கள் உணவின்றி இருப்பிடமின்றி வன்னியிலும், பிற இடங்களிலும் கஷ்டப்படும்போது புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் பணத்தை முடக்கிவைத்திருக்கும் சில தனிநபர்கள் பணத்தை இவ்வாறே இந்திய அரசியல்வாதிகள் மீது முதலீடு செய்து தமது பெருவாயை பெருக்கி வருகின்றனர்.

புலிகளுக்கு இறுதிகட்ட போர்வரை பணம் கொடுத்த தமிழ்மக்கள் அப்பணத்தை அகதிகளாக்கப்பட்ட வன்னி தமிழ்மக்களுக்கே செலவிடப்பட வேண்டுமென்று தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெளிநாட்டு புலி முகவர்கள் நகைக்கடைகள், பலசரக்கு அங்காடி, திருமண மண்டபங்கள், ஆலயங்கள் என்று முதலீடு செய்து தமது சொந்த வருமானத்தை பெருக்கிவருகின்றனர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

-கனடா நிருபர்

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பொன்சேகா மட்டுமல்ல -இராணுவத் தளபதி



விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதியாக சரத்பொன்சேகா பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் மேற்கொண்ட பதவி,இடமாற்றங்களை மறந்துவிட்டார்.ஆனாலும் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்கள் பற்றி தவறாக கருத்து வெளியிட்டுள்ளார் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் அபார பந்துவீச்சு : 229 ஓட்டங்களில் முடங்கியது இலங்கை அணி



இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஸ்ரீசாந்தின் அபார பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாத இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.

கான்பூர், கிரீன் பார்க்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 642 ஓட்டங்களை அவ்வணி பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீசிய ஹேரத் 121 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர், 226 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணியின் ஆகக் கூடுதல் ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 47 ஓட்டங்களையும் அணித் தலைவர் குமார் சங்கக்கார 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஸ்ரீசாந்த் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் மற்றும் ஹோஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடத் தொடங்கிய இலங்கை அணி, சற்று முன்னர் வரை ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை எடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக