2 நவம்பர், 2009

யுத்தத் குற்றச்சாட்டுக் குறித்து அமெரிக்காவின் விசாரணைகளை தடுக்க நடவடிக்கை அவசியம்- ஜே.வி.பி



அமெரிக்காவில் கிறீன் காட் வதிவிட விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த அமெரிக்கா முன்னெடுத்து வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. வதிவிட விசாரணை வரையறைகளை மீறிய அமெரிக்காவின் இந்த முயற்சியானது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:

அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அந்த நாட்டின் கிறீன் காட் வதிவிடத்திற்காக விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். இவ்வாறானதொரு விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சால் வதிவிடம் கோருபவரால் அந்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த வரையறையை மீறி ஜெனரல் பொன்சேகாவுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பாக யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளை நடத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது. இது எமது இறையாண்மையை மீறும் செயலாகும். ஜெனரல் சரத் பொன்சேகா அல்லது இலங்கைப் பிரஜை எவரானாலும் கிறீன் காட் வதிவிட விண்ணப்பத்தை முன்வைக்கும் போது அமெரிக்காவினால் ஒரு வரையறைக்குட்பட்ட ரீதியிலேயே விசாரிக்க முடியும். இதனை மீற முடியாது. ரஎனவே பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முன்னின்று உழைத்தவர் அவர் நாட்டுக்கு மிக முக்கியமானவர் அத்துடன் அவர் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் உயர் அதிகாரி. எனவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு எமது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான விசாரணைகளை தடுத்து நிறுத்தி நாட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கிய சரத் பொன்சேகாவை பாதுகாக்க வேண்டும். அதனை விடுத்து ஏனைய விசாரணைகளை இராஜதந்திர ரீதியில் அணுகாது உதாசீன மனப்பான்மையோடு செயற்பட்டது போன்று இப்பிரச்சினையிலும் அமைதியாக இருக்காது இதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஜே.வி.பி. அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். உயிரைப் பணயம் வைத்து போராட நாம் தயார்.

இப்பிரச்சினையை ஒரு போதும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வில்லை. 30 வருட கால பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்ற தேசப்பற்றாளனைப் பாதுகாத்து தேசத்தின் இறையான்மையை பாதுகாக்கவே முயற்சிக்கின்றோம். ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா என்பது தற்பொழுது உள்ள பிரச்சினையல்ல. அது தொடர்பில் நாம் கவனம் எடுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரும் போது சரியான நேரத்தில் வருவார் என்று சோமவன்ச தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, பிமல் ரட்ணாயக்க எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக