25 செப்டம்பர், 2009

அம்னஸ்டி அமைப்பின் சின்னம்
அம்னஸ்டி அமைப்பின் சின்னம்

இலங்கையில் அதிகாரபூர்வமற்ற முகாமில் இருந்தவர்களுக்கும், இராணுவத்தும் இடையிலான மோதலில் ஒருவர் காயமடைந்ததாக அம்னஸ்டி கூறுகிறது

இலங்கையில் உள்ள அதிகாரபூர்வமற்ற தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்களுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலமான காயங்களுக்கு உள்ளானதாக அம்னஸ்டி இண்டர் நாஷனல் அமைப்பு கூறியுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த அந்த நபர் அந்த தடுப்பு மையத்தில் இருந்து தப்ப முயன்றபோது, முதலில் கொல்லப்பட்டு விட்டதாகவே தகவல்கள் வந்ததாக அம்னஸ்டி தெரிவித்துள்ளது.

அவர் கொல்லப்பட்டதாக வந்த வதந்தி காரணமாக அந்த முகாம்களில் அமைதியீனம் ஏற்பட்டதாகவும், அதனையடுத்து, அந்த முகாமுக்கான பாதை மூடப்பட்டதாகவும் அது கூறுகிறது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பத்தாயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் பேர்வரை கடந்த மே மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்னஸ்டி கூறுகிறது.

ஆனால், அரசாங்க இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் இதனை மறுத்துள்ளளார். bbc

யாழ்ப்பாணத்தில் பயிற்சி மையம் ஆரம்பிக்க ஐ.அமெ.அரசு கணினிகள் அன்பளிப்பு


யாழ்ப்பாணப் பயிற்சி மையத்தை ஆரம்பிப்பதற்கென, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் கணினிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID) கணினிப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்கும், யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதியருக்கு தொழிற் திறமைகளில் பயிற்சி அளிப்பதற்கும் மேற்படி கணினிகளை வழங்கியுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, கணினிப் பயிற்சி நிலையமொன்றை நிறுவுவதற்காக, யாழ்ப்பாணத்திலுள்ள அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஆராய்ச்சி, ஆய்வு மையத்திற்குக் கணினிகளை வழங்கியது.

அகில இலங்கை இந்து காங்கிரஸானது, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, மைக்ரோஸொஃப்ட், இன்போர்ஷெயார் என்பவற்றினால் நிதியிடப்பட்ட ஒரு செயற்திட்டமான, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை நிகழ்ச்சித்திட்டத்தின் (UPP) பயிற்சி நிறுவனமாகும்.

புதிய வளங்களைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்திலும் அதைச் சூழ்ந்துள்ள கிராமப் பிரதேசங்களிலும், பாதகமான, வசதியற்ற நிலையில் உள்ளோருக்கும் உள் நாட்டில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும், இம்மையம் தகவல் தொழில்நுட்ப (IT) திறமைகளில் பயிற்சியை வழங்கும். விசேஷமாக, ஊடகத் துறையிலும் சுற்றுலாத் துறையிலும் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு இப்பயிற்சி உதவும்.

பணிப்பாளர் ரெபேக்கா கோன்

அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக்குழுப் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,

"மேலும் சிறந்த தொழிற் திறமைகளை விருத்தி செய்வதற்கு ஆர்வம் கொண்டுள்ள நூற்றுக்கணக்கான இளையோருக்கு உதவுவதற்காக, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தப் புதிய தகவல் மையத்திற்கு ஆதரவு வழங்குவதில், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி மகிழ்ச்சியடைகின்றது.

மோதலினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும், எதிர்காலத்தில் மேலும் சிறந்த தொழில்களுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இளையோரை ஆயத்தப்படுத்துவதற்கு உதவுவதற்காகவும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தன்னை அர்ப்பணித்துள்ளது"என்று கூறினார்.

சுற்றுலாத்துறை, ஆடைத் தயாரிப்புத்துறை, ஊடகத்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் தொழிற்சேனையை அபிவிருத்தி செய்வதற்கு, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை (UPP) நிகழ்ச்சித் திட்டம், இலங்கை முழுவதிலும் தகவற் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குகின்றது.

2010ஆம் ஆண்டளவில் 11,250இற்கும் மேற்பட்ட இளையோருக்கு அடிப்படைத் தகவற் தொழில்நுட்பத்தை வழங்கும் அரசாங்கப் பயிற்சி நிறுவனங்களுடனும், தனியார் பயிற்சி நிறுவனங்களுடனும் சேர்ந்து இச்செயற் திட்டம் இயங்குகின்றது. தொழில் வாய்ப்புக்கள் பெருமளவில் காணப்படும் சுற்றுலாத் துறையிலும் ஊடகத் துறையிலும் பயிற்சி வழங்குவதில் இந்த யாழ்ப்பாணத் திட்டம் கவனஞ் செலுத்தும்.

1996ஆம் ஆண்டு முதல், யாழ்ப்பாணத்தில் வசதி குறைந்தோருக்குத் தர்ம சேவைகளையும் சமூக சேவைகளையும் வழங்கிவரும் அகில இலங்கை இந்து காங்கிரஸுடன் இணைந்து, வரையறுக்கப்படாத உள்ளார்ந்த தோழமை நிகழ்ச்சித் திட்டத்தின் கலைத்திட்டம் (பாட விதானம்), இம்மையத்தில் பயன்படுத்தப்படும்.

அ.இ.இந்து காங்கிரஸின் பொதுச் செயலாளர்

அகில இலங்கை இந்து காங்கிரஸின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன்,

"நமது இளையோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த உதவி நமக்குத் தேவைப்படுவதால் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கும் இவ்வாதரவுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத் தமது அறிவையும் திறமைகளையும் உகந்த அளவில் யாழ்ப்பாண இளையோர் பெற்றுக் கொள்ள விரும்பும் இத்தருணத்தில் வழங்கப்படும் இந்த உதவியையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்"என்றார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது
கல்லடியில் 'கிழக்கின் முழக்கம் 2009' கலைவிழா நாளை ஆரம்பம்

வடக்கு, தெற்கு நட்புக்குக் கலை, விளையாட்டு என்பவற்றின் மூலம் கைகோர்க்கும் ஓர் அற்புத நிகழ்வாக 'கிழக்கின் முழக்கம் 2009' கலைவிழா மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நாளை கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

காலை 8.00 மணி முதல் நடுநிசி வரை நடைபெறும் இந்தக் கலைவிழாவுக்கு கிழக்கு மாகாணசபை அனுசரணை வழங்குகிறது. இந்த நற்பணிக்கான ஊடக அனுசரணை வழங்குகின்றது ஸ்ரீ டி.வி. நிறுவனம். இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 152 நாடுகளில் தனது நிகழ்ச்சித் திட்டங்களை ஒளிபரப்பி வருகின்றது.

இந்நிறுவன பணிப்பாளர் துஷார குரேராவும் தமது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை எமக்கு வழங்குகின்றார்.

அன்றைய தினம் நீச்சல் ஓட்டப்போட்டிகள், உதைபந்தாட்டம் மற்றும் தோணி ஓட்டம் உட்பட பல்வேறு விளையட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அலங்கார காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மெஜிக் காட்சிகள் என்பனவும் விழாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குக் கேடயங்கள், பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும். இறுதியில் வாண வேடிக்கை, இசைக்கச்சேரி என்பன இடம்பெறும்
அணு ஆயுதமற்ற உலகை கட்டியெழுப்புவது தொடர்பான முக்கியத்துவமிக்க தீர்மானம் - ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நிறைவேற்றம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்ற உச்சிமாநாட்டில் அணு ஆயுதமற்ற உலகைக் கட்டியெழுப்புவது தொடர்பான தீர்வுத் திட்டமொன்றுக்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அணு ஆயுத பரவலாக்கத்திற்கு முடிவு கட்ட அழைப்பு விடுத்த இந்தத் தீர்வுத் திட்டத்தில், அணு ஆயுத அச்சுறுத்தல் மிக்க நாடுகள் என மேற்குலக நாடுகளால் வர்ணிக்கப்படும் ஈரான் வட கொரியா என்பன தொடர்பில் குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை.

மான்ஹதனிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற இரு மணித்தியால கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அனைத்து நாடுகளதும் மக்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள அணு ஆயுத பரவலாக்கம் தொடர்பில் நாம் கவனமெடுக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்ற பின் கலந்து கொள்ளும் முதலாவது ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் இதுவாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் அணு குண்டுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அணு ஆயுத பரவலாக்க தடைச் சட்டத்தில் இதுவரை கைச்சாத்திடாத அனைத்து நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்ற தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளை இலக்கு வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் அங்கத்துவம் வகிக்கிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக