பொலீஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு யாழில் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் பெற்றனர்-
யாழ். மாவட்டங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு பொலீஸ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பொலீஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு யாழ்.குடாநாட்டில் நேற்றையதினம் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களில் கடiமாயற்றுவதற்காக தமிழ்ப்பேசும் பொலீசாரை சேர்க்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் இடம்பெறுகின்றன இதன்போது நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு மீண்டும் இம்மாதம் 29ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைகள் மூலம் யாழ். பொலீஸ் நிலையங்களுக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
புத்தளம் பழைய மன்னார் வீதி பாலத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகாமையிலிருந்து சீ4ரக வெடிபொருட்களை பொலீசார் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே குறித்த வெடிபொருட்கள் பொலீசாரினால் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். குறித்த பாலத்திற்கு அருகில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750கிறாம் சீ4 ரக வெடிபொருட்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
கிராண்ட்பாஸில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது, நிட்டம்புவையில் பரா குண்டுகள் மீட்பு-
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆயுதமொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி கொள்வனவு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றுமாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இத்தாலிய தயாரிப்பிலான 8மில்லிமீற்றர் ரக துப்பாக்கியே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கம்பஹா, நிட்டம்புவைப் பிரதேச கிணறு ஒன்றுக்குள்ளிருந்து முன்னேறிச் செல்லும் பகுதியைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பரா வெளிச்சக் குண்டுகள் இரண்டு இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோதே இக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாவிலாறுமுதல் புதுமாந்தளன் வரையான நடவடிக்கை தொடர்பிலான கண்காட்சி-
படையினர் மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ம்;திகதி முதல் 07ம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்;த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாவிலாற்றிலிருந்து புதுமாத்தளன்வரை படையினர் மேற்கொண்ட சகல முன்னகர்வு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, படையினரை கௌரவிக்குமுகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிடப்படவுள்ளது
முட்கம்பி சிறைக் கூடங்களிலேயே தமிழ் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் - மனோகணேசன் எம்.பி. விசனம்
|
|
தமிழ் மக்கள் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக முட்கம்பி வேலிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ முடியுமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. வின் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் இவை முகாம்கள் அல்ல, முட்கம்பிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களே ஆகும்.
கண்ணிவெடிகளை அகற்றிய பின்பே மக்களின் மீள் குடியேற்றம் நடைபெறுமென அரசு கூறுவது முழுப் பொய்யாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எமது படையினர் கண்ணிவெடிகளை அகற்றிக் கொண்டே புலிகளை முடக்கினர்.
எனவே இன்று மிஞ்சிப் போனால் 10 வீதமாகவே கண்ணிவெடிகள் இருக்கும். எனவே மக்களை மீளக் குடியேற்றõமைக்கு கண்ணிவெடிகள் காரணமல்ல.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களில் 1 1/2 இலட்சம் பேருக்கு வாக்குரிமை உண்டு.
இந்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்கே மக்களை அரசாங்கம் பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளது.
அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு
சர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்
இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்
இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக