இலங்கைத்தமிழர்கள் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ்வதை அரசு எப்படித் தடுக்கலாம்?
இலங்கையில் தமது சொந்த பந்தங்களுடன் நல்ல வாழ்வை தமிழ்ப் பெண்களும்
குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் வாழ்வதை எப்படி அரசு தடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுவதை அடியோடு நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் பேர்களுக்கு தான் உணவூட்டி வருவதாகக் கூறியுள்ளது.
முகாம்களில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் மனிதார்ந்தம் அற்ற நிலைமையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு சில நாட்களுக்கு முன்னர் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. அது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் ஜிஎல் பீரிஸ், குற்றம் சாட்டுவது மிகச் சுலபம். ஆனால், அரசு மிகக் கடுமையான பணியை சிரமங்களுக்கு மத்தியில் ஆற்றி வருகின்றது என்றார்.
ஏதாவது தவறுகள் இருந்தால் அவற்றை நாம் திருத்திக்கொள்வதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இடம்பெயர்ந்த மக்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதற்கு மிகபெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 லட்சம் பேருக்கு உணவூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றோ வாழ்வதற்கு தம்மை அனுமதிக்கும்படி முகாம்களில் உள்ள மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்று கூறப்படுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இது எல்லாம் எதிரணி அரசியல்வாதிகளால் பரப்பப்படும் வதந்திகள் என்றார்.
ஒரு அரசாக எங்களால் முடிந்ததை சிறப்பான முறையில் நாம் செய்கிறோம். இடம்பெயர்ந்த மக்களில் சிலர் ஏற்கனவே மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
முகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரை சிறிலங்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அரச அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
திகைப்பூட்டும் சூழ்நிலைக்குள் இடம்பெயர்ந்த மக்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதன் மூலம், அவர்களது அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார்.
எந்தச் சட்டங்களின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அதனைப் புரிந்துகொள்ளலாம். அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் அவர்களின் சொந்த பந்தங்களுடன் நல்ல வாழ்க்கை வாழ்வதை அரசு எப்படித் தடுக்க முடியும்? என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக