10 பிப்ரவரி, 2010



என் கணவரின் உயிருக்கு ஆபத்து: பொன்சேகா மனைவி கண்ணீர்




கொழும்பு,பிப்.9: ​ இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட என்னுடைய கணவர் சரத் பொன்சேகா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை;​ அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று அவருடைய மனைவி அனோமா கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

​ ​ தலைநகர் கொழும்பில் சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு விவாதித்துக் கொண்டிருந்தபோதே அவரை ராணுவ அதிகாரிகள் சிலர் சிறிய படையுடன் வந்து கைது செய்தனர்.​ அவர்கள் அந்த அறைக்குள் வரும்போதே கதவை உடைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.

​ என்னை ஏன் கைது செய்கிறீர்கள்,​​ என்னைக் கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா,​​ ராணுவத்திலிருந்து விலகி சாதாரண சிவிலியனாகிவிட்ட என்னைக் கைது செய்வதாக இருந்தால் போலீஸ் அதிகாரிதான் வரவேண்டும் என்றெல்லாம் மறுத்த பொன்சேகாவை அந்த அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.​ ​

​ எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கைதாக உடன்பட்டால் அதிக சேதம் இல்லாமல் உங்களை கூட்டிச் செல்வோம்,​​ இல்லாவிட்டால் பலத்தைக் காட்ட வேண்டியிருக்கும் என்று ஒரு அதிகாரி குரலை உயர்த்தி எச்சரித்ததோடு அவரது கையில் விலங்கை மாட்டி தரதரவென்று இழுத்துச் சென்றார்.​ அப்போது உடன் இருந்த பிற அரசியல் தலைவர்களும் தலையிட்டு அதைத் தடுக்க முயன்றனர்.​ ஆனால் ராணுவ அதிகாரிகளோ தடுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்களைத் தங்களுடைய பார்வையாலேயே எச்சரித்துவிட்டு பொன்சேகாவையும் அவரது பத்திரிகைச் செயலரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர்.​ ​

​ ​ அப்போது ஒரு ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவின் பிடறியில் அடித்துக் கொண்டே சென்றதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் பின்னர் நிருபர்களுக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.

​ என் கணவரை ராஜபட்ச கைது செய்வார் என்று எதிர்பார்த்தேன்,​​ ஆனால் இப்படி நாயை இழுத்துச் செல்வதைப் போல இழுத்துச் செல்வார்கள் என்று கனவில்கூட நினைக்கவில்லை என்று கூறி விம்மி அழுதார் அனோமா.

​ ​ என் கணவரை அவர்கள் கைது செய்யவில்லை,​​ துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர் என்பதே உண்மை என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

​ பொன்சேகா இப்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார் என்று கூறப்படுகிறது.​ இனி அவருடைய ஆதரவாளர்களும் தேச பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும்,​​ பொன்சேகாவைப் பற்றி புதிய குற்றச்சாட்டுகளைக் கூறினால் உங்களை விட்டுவிடுகிறோம் என்று ஆசை காட்டி அவருடைய ஆதரவாளர்களில் சிலரை அவருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்வார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.​ ​

​ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு பொன்சேகாவும் பொறுப்பு என்று ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கூறியதால்,​​ தனக்குப் போட்டியாக பொன்சேகா வந்துவிடக்கூடாது என்பதில் ராஜபட்ச குறியாக இருந்தார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ ராஜபட்சவும் அவருடைய தம்பிமார்களும் இலங்கைப் போரைப் பயன்படுத்தி அடித்த கொள்ளையையும் ஊழலையும் பற்றிப் பிரசாரத்தில் பேசினார் என்பதற்காக அவர் மீது கடும் கோபம் கொண்டார் ராஜபட்ச.

​ அத்துடன் ராஜபட்ச அரசின் ஊதாரித்தன நிர்வாகத்தால் விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்துவிட்டதையும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 90% பேர் அமைச்சர்களாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்காமல்,​​ சர்வதேச உடன்பாடான ஜெனீவா கோட்பாட்டுக்கு முரணாக சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று அவர் கூறிய கடுமையான குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் பேசப்பட்டு இலங்கை அரசுக்குப் பெருத்த தருமசங்கடத்தை ஏற்படுத்தியது.​ அதிபரையும் அவருடைய தம்பியையும் போர்க்குற்றவாளியாகக் கருதி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன.​ ​

​ எனவே சரத் பொன்சேகாவை இனியும் விட்டுவைத்தால் நமக்கு ஆபத்து என்று கருதியே அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு,​​ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி,​​ ராணுவத்திலிருந்து ஓடியவர்களுக்கு சட்டவிரோதமாகப் புகலிடம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இனி வெளியுலகையே பார்க்க முடியாதபடிக்கு தண்டித்துவிட இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​ ​ பொன்சேகா மீதான வழக்கை சாதாரண நீதிமன்றங்களில் நடத்தினால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவிடும் என்றும் தங்களுக்கு சங்கடம் தரும் பல உண்மைகள் வெளியாகிவிடும் என்றும் அஞ்சியே ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

​ ​ மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கை அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு கண்டித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக