11 பிப்ரவரி, 2010


ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை



இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பீபீஅண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாதுபீபீ என்று கூறியுள்ளார்.



சந்திரயான் மீண்டும் சாதனை


அகமதாபாத்: சந்திரயான் மூலம் அனுப்பப்பட்ட ‘எம்-3’ கருவி, நிலவில் மெக்னீசிய வகை பாறைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. நிலவில் நீர் மூலக்கூறு இருப்பதை கண்டுபிடித்த சந்திரயானுக்கு இது அடுத்த வெற்றியாக கருதப்படுகிறது. சந்திரயான் ‘எம்&3’ (மூன் மினராலஜி மேப்பர்) என்ற கருவியை நாசா அனுப்பியிருந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை இக்கருவி கண்டுபிடித்தது. இந்நிலையில், மெக்னீசிய தனிமம் அதிகம் உள்ள பாறைகள் நிலவில் இருப்பதை ‘எம்&3’ கருவி தற்போது கண்டுபிடித்துள்ளது. சந்திரயான் தொடர்பாக அகமதாபாத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லே பீட்டர்ஸ் தெரிவித்தார். சந்திரயான் பயணத்தின் அடுத்த சாதனையாக இது கருதப்படுகிறது.


பதவிக்காக மக்களை துன்புறுத்த வேண்டாம்: ராஜபக்சேவுக்கு புத்த துறவிகள் கண்டனம்


அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரத்பொன்சேகாவை இலங்கை அரசு திடீரென கைது செய்துள்ளது. அவர் எங்கு சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொன்சேகா மனைவி அனோமா கூறியுள்ளார். பொன்சேகா கைதுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளன. இலங்கையில் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் புத்த துறவிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மகாநாயகர் என்று அழைக்கப்படும் புத்த துறவி சித்தார்த்த சுமங்கல தேரா இதுபற்றி கூறியிருப்பதாவது, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுக்கு சேவை செய்த ராணுவ அதிகாரியை கைது செய்த விதம் மிகவும் மோசமானது. தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தி வருகிறது. ராஜபக்சே அரசு நாட்டுக்கு நல்லதை செய்யும் என்று எதிர்பார்த்து தான் நாங்கள் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அரசு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி காடுகளில் வசிப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது கவலை தருகிறது என்று கூறியுள்ளார். உருகம புத்தரகித்த தேரா எனும் இன்னொரு புத்த துறவியும் சரத் பொன்சேகா கைதை கண்டித்து உள்ளார். அவர் அரசு தங்கள் எதிர்ப்பாளர்களை விரோதிகளாக நடத்துவதாக கூறியுள்ளார்.


10.02.2010 தாயகக்குரல்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் 2010 நவம்பர் 19ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து பொது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டதாக அரசாங்கவர்த்தமானி தெரிவிக்கின்றது. வர்த்தமானி அறிவித்தலின்படி
பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19 திதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னமே பிரதான கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. வேட்பாளர்களை கட்சிகள் அறிவிக்கமுன்னரே வேட்பாளர் என சிலருடை தேர்தல் சுவரொட்டிகள் தலைநகரெங்கும் காணப்படுகின்றன.


ஜனாதிபதி தேர்தலில் இரு வேறு அணிகளாக செயற்பட்ட கட்சிகளின் கூட்டு பொதுத் தேர்தலில் தொடருமா என்பது சந்தேகமே. குறிப்பாக எதிர்கட்சிகள் கூட்டாக போட்டியிடுவதானால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் அவர்களிடையே முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சின்னமான அன்னமா? அல்லது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையா பொது தேர்தல் சின்னம் என்பதுதான் எதிர்கட்சிகளிடையே தோன்றியுள்ள இழுபறி நிலைக்கு காரணமாகும்.

யானைச் சின்னத்திலேயே பொது தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ரணில் தெரிவிக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பாலோர் யானைச் சின்னத்தையே வலியுறுத்துகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.). ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு(மங்கள சரவீர), ஜனநாயக மக்கள் முன்னணி;(மனோ கணேசன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பொது சின்னமாக அன்னத்திலேயே போட்டியிடுவதை விரும்புகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானித்தால் ஜே.வி.பி.; மணிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணி;, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யானைச் சின்னத்திலே போட்டியிட்டிருந்தன. எனவே அவர்கள் அன்னத்தில் கேட்பதற்கு ஆதரவு தெரிவித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதால்;; வடக்கு கிழக்கில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யலாம்.
கிழக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் ;பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. பொது தேர்தலில் தனித்த போட்டியிடப்போவதாக ஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. ஆகியன அறிவித்திருந்தபோதிலும் மேற்படி இரு கட்சிகளும் அரசாங்கத்தின் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரீ காந்தாவும் அவரது சகாக்களும்; சுயேட்சையாக போட்டியிடலாம். இன்னும் சில கட்சிகள் தேர்தல் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லை. பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது ராணுவ விதிகளை மீறிய குற்றசாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய கைது தொடர்பாக பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை சாதகமாகவும், பாதகமாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராவார். ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரமுண்டு. இதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கிறார்.

அண்மையில் சரத் பொன்சேகா பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
பயங்கரவாதக் குழுவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றிய படையினருக்கு துரோகம் இழைப்பது தொடர்பில் சரத் பொன்சேகா உறுதியாக இருந்தார் என்பது பி.பி.சி. செய்தி சேவைக்கு சரத் பொன்சேகா அளித்த பேட்டியில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் கைது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா தெரிவித்துள்ளார். ஐ. நா., அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சரத் பொன்சேகா கைது குறித்து கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் குறோலி, எந்த நடவடிக்கையும் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகா கைது உள்நாட்டு சட்டவிதிமுறைகளுக்கு அமையவே இடம் பெற்றிருப்பதா கூறும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிடமுடியாது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் அனைத்து விதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாக தேர்தல் ஆணையாளர் கடந்த மூன்றாம் திகதி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் தொடர்பான சர்ச்சை குறைய இப்போது எதிர்கட்சிகள், சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதை கருவாக வைத்து அரசுக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரம் சூடுபிடிக்குமா? புஸ்வாணமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக