25 நவம்பர், 2009

25.11.2009 தாயகக்குரல்29

அடுத்து முதலில் நடைபெறும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருவது யாவரும் அறிந்ததே. இந்தக் கேள்விக்கு நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் மகாநாட்டில் விடை கிடைத்துள்ளது. ஜனாதிபதி தோர்தலை முதலில் நடத்துவது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.


ஜாதிபதி பதவிக்காலம் இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான காரணங்களை நேற்று ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகாநாட்டில் ஜனாதிபதி விளக்கினார். குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய நிலையில் நாட்டை கட்டி எழுப்ப புதிதாக மக்கள் ஆணையைப் பெறவிரும்புவதாகவும் இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர்கள் உட்பட முழு நாட்டினதும் மக்கள் ஆணையைப் பெறுவதும் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோதும் தேர்தலகள்; ஆணையாளரால் தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. நேற்று நாடெங்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவை ஆதரித்து மக்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளன.


ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தட்டும் பார்ப்போம் என சவால் விட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி இன்னும் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அது தொடர்பாக ஜே.வி.பி.யுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சிக் கூட்டணிசார்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


பொது வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணிக்கும் ஜே.வி.பி. க்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டுள்ளார். சரத் பொன்சேகாவின் வேண்டுதலின்பேரில் ரணிலை காபந்து அரசாங்கத்தின் பிரதமராக்க ஜே.வி.பி ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.. எனவே பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.சொக்ஸி போன்றோருக்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. பொது வேட்பாளர்; தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் எதிலும் இவர்கள் பங்குபற்றவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணியின் பொது வேட்பாளருடன் பேசியபின்னரே அவரை ஆதரிப்பது தொடர்பாக தமது கட்சி முடிவெடுக்கும் என எதிர்கட்சிக் கூட்டணியில் உள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பதானால் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னர் நிபந்தனை விதித்திருந்த ரணில் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையைப் பெற்றாரா இல்லையா என்பது தெரியவில்லை. தமிழ் மக்களின் வாக்கை தம்பக்கம் இழுக்கும் நோக்கில் காபந்து அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும், மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ரணில் பொது வேட்பாளருக்கு விதித்திருந்ததை மறந்துவிட முடியாது.;. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்பார்க்காத விதத்தில் அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியதுடன் முகாம்களில் உள்ள மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.


முகாம்களில் உள்ள மக்களின் மீள் குடியேற்றம் திருப்திகரமாக முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சரத் பொன்சேகா தான் ஓய்வு பெற அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ~இப்போதைக்கு மீள்குடியேற்றம் செய்யக்கூடாது| எனத் தெரிவித்திருந்தார்.
அண்மையில் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மீள்குடியேற்றம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சி இனி தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்யமுடியாது.


எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சி இப்போது கூறுகிறது, அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த தங்களுடைய நிர்ப்பந்தமே காரணம் என்கிறது.. அதே போல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தங்களது நிர்பந்தம் காரணமாகவே அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியதாக கூறுகிறது.
ஜனாதிபதி தேர்தல் களத்தில் வடக்கு கிழக்கில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தமே முக்கிய கருப்பொருளாக இருக்கும். அதாவது புலிகளை அழித்த வெற்றி இராணுவத்திற்குரியது என ஐக்கிய தேசியக் கட்சி கூறிவருகிறது. இராணுவ வெற்றிக்கு ஜனாதிபதியின் அரசியல் தலைமையே காரணம் என்கிறது அரசாங்கம். இந்த விவாதம் எற்கனவே ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் களத்தில் சூடுபிடிக்கலாம்.


புதிய இராணுவத் தளபதி பதவி ஏற்றபோது யுத்தம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது. புலிகளுடனான யுத்தத்தில இராணுவம் வெற்றி பெற அரசியல் தலைமையே முக்கிய காரணம் எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது.
ஒரு நாட்டின் இராணுவ வெற்றிக்கு அந்நாட்டு அரசியல் தலைமையே பிரதான காரணம். கடந்த காலங்களில் பல சிறந்த இராணுவத் தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அன்றைய அரசியல் தலைமைகளின் பலவீனத்தாலேயே புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற அபிப்பிராயமும் இலங்கை இராணுவத்தால் புலிகளை வெற்றி கொள்ளமுடியாது என்ற அபிப்பிராயமும் பல மட்டங்களிலும் மேலோங்கின.


அன்றைய அரசியல் தலைமைகள் இராணுவத்தின் முன்னேற்றத்தின்போது அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கு அடிபணிந்து இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி வந்தன. அதனால் இராணுவத்தினரும் போரில் அக்கறைகொள்ளவில்லை. ஆனால் தற்போதைய அரசியல் தலைமை அந்நிய சக்திக்கு அடிபணிந்து யுத்தநித்தம் மேற்கொள்ளாமல் இராணுவத்தினருக்கு சரியான தலைமை கொடுத்ததாலேயே இப்போது புலிகளை இராணுவத்தால் வெற்றி கொள்ள முடிந்தது என்ற விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு இரு தரப்பினரும் பல வியூகங்களை வகுக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி கூட்டணியில் ஒரு அங்கமாக மக்களுக்கு காட்ட ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக யார் என்ன கூறப்போகிறார்கள் என்பதையே எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக