19 செப்டம்பர், 2009

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர்

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

எதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.

காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.

எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ள பற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரி வித்திருக்கிறார். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ண, பியசேன கமகே, உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்பு: சேகரிப்பு நிதி ஒரு கோடியை விஞ்சியது

அக்டோபர் 30 வரை மாணவர் பங்களிப்புக்கு சந்தர்ப்பம்

ஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங் களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்ட த்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக