2 பிப்ரவரி, 2010

மதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிப்பு-

மீள்குடியேற்ற நடவடிக்கைகளின்கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின்கீழ் இன்று 1000; பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வுபெறச் செய்ய நடவடிக்கை-

கடந்த தேர்தல் காலப்பகுதியிலும் அதன்பின்னர் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 12 இராணுவ அதிகாரிகளை பதவிகளைப் பாராது சேவையிலிருந்து ஓய்வுபெறச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் அத்தியாவசியத் தேவைப்பாடாக காணப்படும் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் அரசியல் மயமாக்கப்படுதலை தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது சேவைக்காலத்தினுள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இராணுவ ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடித் தாக்கம் செலுத்துமென பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக யாழ். மீனவர்களுக்கு அசௌகரியம்-

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. யாழ்ப்பாண கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தவேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்ற போதிலும் அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் பொகொல்லாகம அறிவித்துள்ளார். 50 வீதமான மீன்பிடி உற்பத்திகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசஅதிபர் தெரிவித்துள்ளார். தற்போது வருடாந்தம் 2000 மெற்றிக்தொன் அளவில் மீன்உற்பத்தி செய்யப்படுவதாகவும், 1981ம் ஆண்டு காலப்பகுதியில் 4ஆயிரம் மெற்றிக்தொன் வரையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்று பூநகரியில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்வு-

நலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெடுங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியில்லை-பாதுகாப்புச் செயலாளர்-

புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று பாதுகாப்புச் செயலர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நவம்பர் 19ம் திகதி 02வது தடவையாக சத்தியப்பிரமாணம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர்மாதம் 19ம்திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தனது இரண்டாம் கட்ட பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியிருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக டிசில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் நவம்பர் 19ம்திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விளக்க அறிக்கையொன்று உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் லிஸ்சியான் ராஜகருணா கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்




இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்- நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும்.. மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.. இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும். யுத்த இறுதிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எம் அனைவரது நெஞ்சங்களிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என கூறி சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் எஞ்சியுள்ள எமது மக்களை தொடர்ந்தும் அவலத்துக்குள் சிக்கவைத்து சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தலைமைகளை இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எமது கட்சிக்கு உறுதியளித்தவாறு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தல், வடக்கு - கிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையிலான அபிவிருத்தி ஆகிய விடயங்களை தொடர்ந்தும் துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

த.சித்தார்த்தன்

தலைவர்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
மேலும் இங்கே தொடர்க...



பொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித்தது இலங்கை




கொழும்பு,​​ பிப்.​ 1:​ ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.

பிரிட்டனில் கடந்த வாரம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.​ இதில் 64,692 பேர் பங்கேற்றனர்.​ இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும்,​​ 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.​ 251 பேர் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கையின் மூத்த அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா திங்கள்கிழமை கூறியதாவது:

இலங்கை, ​​ பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ இறையாண்மை மிக்க நாடு இலங்கை.​ மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆட்சி நடைபெறுகிறது.

இது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பை நிராகரிக்கிறோம் என்றார்.

இலங்கை:​ 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு




கொழும்பு,​​ பிப்.​ 1:​ இலங்கையில் 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள்,​​ 2 பிரிகேடியர்களும் அடங்குவர்.

இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும்,​​ அதிபர் தேர்தலின்போது அரசியலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவர்கள் தவிர,​​ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும்,​​ முன்னாள் ராணுவத் தளபதியுமான பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கருதப்பட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகளையும் அதிபர் ராஜபட்ச இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.







பார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி: பொன்சேகா மீண்டும் தீவிரமாகிறார்





கொழும்பு: "விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும்' என, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. இதனால், பொன்சேகா மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறார்.


இலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் கூறியதாவது: அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு உற்சாகம் தரும் தகவல். எனவே, விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு சம்பந்தன் கூறினார்.


எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுல் ஹக்கீம் கூறுகையில், "தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் கூட்டணி தொடரும். பொன்சேகாவை ஆதரிக்கும் விஷயத்திலும் மாற்றம் இல்லை. கூட்டணியை தொடர்வது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர்களிடமும் பேசி வருகிறோம்' என்றார்.




சிகரெட் விற்பனையை குறைக்க பிரிட்டன் முடிவு



லண்டன்: பிரிட்டனில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவால் தற்போது மூன்றரை லட்சம் பேர் புகைப்பதை விட்டு விட்டனர்.


தற்போது, பிரிட்டனில் 21 சதவீதம் பேர் புகைத்து வருகின்றனர். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆன்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "சிகரெட் குறித்த கவர்ச்சி விளம்பரங்களை தடை செய்வது, சிகரெட் மீது அச்சிடப்படும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் வாசகங்களை தடை செய்வது, காசு போட்டால் சிகரெட் கொடுக்கும் இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, அமைச்சர் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். "அரசின் இந்த கடுமையான நடைமுறை தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது' என, சிகரெட் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம்



பாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.

இதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.

பிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக கூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.

இந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.





மதியாமடுவில் இவ்வாரம் மீள்குடியேற்றம்



மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது


இலங்கைக்கான உலக உணவு திட்ட நிதியுதவி ரூ.3288 மில். அதிகரிப்பு



ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 3288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கு இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

ஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது. இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பின்னர் இந்நிதி 163.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜோஷெல் கூரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் யுத்தத்தினால் பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு, யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...
35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு

தொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது



தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்லது அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

1 பிப்ரவரி, 2010

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் கொலை: இலங்கை ராணுவத்தை சர்வதேச நாடுகள் புறக்கணித்தன; போர் பயிற்சிக்கு அழைக்கவில்லை




இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப்புலி அரசியல் தலைவர் நடேசன், தளபதி புலித்தேவன் மற்றும் முக்கிய தளபதிகள் பலர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். இலங்கை ராணுவ தளபதிகளிடம் தகவல் கொடுத்து விட்டே வெள்ளை கொடி பிடித்தபடி வந்து சரண் அடைந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

சர்வதேச விதிப்படி சரண் அடைந்தவர்களை கொல்லக்கூடாது. இதை இலங்கை ராணுவம் மீறியதால் சர்ச்சை எழுந்தது.

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் ராணுவம் சுட்டுக் கொன்றதை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதியும் ஒத்துக்கொண்டார்.

ராஜபக்சே தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவால்தான் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அவர் வெளிப்படையாக கூறினார்.

ராணுவ தளபதியே இது உண்மை என ஒத்துக்கொண்டதால் இலங்கை ராணுவத்துக்கு சர்வதேச அளவில் கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பல வெளிநாடுகள் இலங்கை ராணுவத்தை தங்களுடன் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட அழைப்பது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தால் இந்த ஆண்டு இலங்கை ராணுவத்தை யாரும் போர் பயிற்சிக்கு அழைக்க வில்லை.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறும்போது, முன்னாள் ராணுவ தளபதியே குற்றச்சாட்டை கூறியதால் இலங்கை ராணுவத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கை ராணுவத்தை போர் பயிற்சிக்கு அழைக்கும். பொன்சேகா கூறிய குற்றச்சாட்டால் இந்த வருடம் யாரும் பயிற்சிக்கு அழைக்கவில்லை என்றார்.




அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள்.



அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும். பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கமரீ.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

உலகம் குழந்தைகளை கடத்திய 10 அமெரிக்கர்கள் கைது



போர்ட் ஆப் பிரின்ஸ் : பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹைதி தீவிலிருந்து 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றதாக 10 அமெரிக்கர்களை ஹைதி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ஹைதி மக்கள் தொடர்பு அதிகாரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
சில்ஸ்பி லாரா லாவோன் என்ற அமெரிக்கப் பெண்ணின் தலைமையில் அமெரிக்கர்கள் 33 குழந்தைகளைக் கூட்டிச் சென்ற போது மால்பாசோ என்ற எல்லையோர நகரில் பிடிபட்டனர் என ஹைதி போலீசார் கூறினர்.
அவர்கள் பணம் கொடுத்து ஹைதி குழந்தைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதைத் தவிர ஹைதி அரசின் அனுமதி இல்லாமல் மைனர்களான குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவும் சட்டமீறலாகும் என ஹைதி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் புகார்களை லாரா லாவோன் மறுத்தார். இங்கு அனாதைக்குழந்தைகளுக்காக ஆதரவு இல்லம் அமைப்பது எங்கள் திட்டம். அதற்காக நிலம் கூட வாங்கிவிட்டோம். விரைவில் அங்கு கட்டடம் அமைக்கப்படும். அது வரை காபார்த்தி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழந்தைகளை தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த அநாதைக் குழந்தைகளின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்பவே அவர்களை அழைத்துச் சென்றோம் என லாரா லாவோன் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் எல்லாம் போர்ட் ஆப் பிரின்ஸ் நகருக்கு வெளியே உள்ள அரசு அனாதைகள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹைதியிலிருந்து இளங்குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்ல நடக்கும் முயற்சிக்குஹைதி பிரதமர் ஜீன் மாக்ஸ் பெல்லாரிவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதி (யுனிச்செப்) அதிகாரிகளும் கண்டனம் செய்துள்ளனர். தரை வழி எல்லைகள், விமான நிலையங்களில் எங்கள் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள் என யுனிச்செப் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின்
கப்பல்கள்: ஈரானைக் கட்டுப்படுத்த முயற்சி



















நான்கு அரபு நாடுகளுக்கு ஏவுகணைகளும் அனுப்பி வைப்பு



வளைகுடாவைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலிருந்து வளை குடா நாடுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் ஏவுகணைகளையும், யுத்தக்கப்பல்களையும் அங்கு விரைவில் அனுப்பவுள்ளது.

ஈரானின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தல், அரபு நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பற்றல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஏவுகணைகளும், யுத்தக் கப்பல்களும், அனுப்பப்படவுள்ளன. ஓமானும் இவ்வாறான உதவிகளை வழங்குமாறு அமெரிக்காவைக் கேட்டுள்ளது. யுரேனியம் செறிவூட்டல் விடயங்களை ஈரான் நிறுத்தாவிட்டால் இராணுவ நடவடிக்கையில் இறங்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்தது.

இராணுவ வல்லமையால் மத்திய கிழக்கை ஈரான் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அரபு நாடுகள் குற்றம் சாட்டியதுடன் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் தாங்களும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க வேண்டுமென அரபு நாடுகள் வேண்டுகோள் விடுத்தன.

அமெரிக்கா இந் நாடுகளைப் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் தற்போது உரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இனி மேல் அரபு நாடுகள் ஈரானைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை உரிய பாதுகாப்பு ஆயுதங்களை அங்கு அனுப்பவுள்ளோம் என அண்மையில் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

இதற்கிணங்க இது வரை மூன்று ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள் வளைகுடாவை நோக்கி அனுப்பப்பட்டுள் ளன. அமெரிக்காவின் இந்நடவடிக்கை ஈரானை அமைதி வழிக்குக் கொண்டு வரும் முயற்சியைப் பாதிக்கும் என நம்பப்படுகிறது.

ஈரானின் அபாயகரமான நடவடிக்கைகளை சீனா புரிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுள்ள அமெரிக்கா ஐ. நா. வின் யோசனைக்கு இணங்கி சீனா செயற்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

எட்டு பற்றியட் ஏவுகணைகளை வளைகுடாவுக்கு அனுப்பும் எண்ணம் அமெரிக்காவுக்குள்ள தாக வளைகுடாவுக்குப் பொறுப்பான அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டார். யுரேனியம் செறிவூட்டல் வேலைகளை ஈரானின் புரட்சிகரப் படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது.
மேலும் இங்கே தொடர்க...
இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல்



இந்தியாவின் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் படகுகளை இந்திய கடலோர பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த படகுகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பினும், தற்போதே அவை கொச்சின் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் லட்சத்தீவுக்கு அருகில் உள்ள மினிக்காய் தீவுக்கு அருகில் வைத்தே இந்தப் படகுகள் கைபற்றப்பட்டுள்ளன. இதில் இருந்த 11 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், கடலோர பொலிசாரின் மீரா என்ற கப்பலின் மூலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த படகுகள் இரண்டும் இன்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மீன்பிடித்துறை அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்திய மீன்பிடிப்படகுகள் அதிக அளவில் இலங்கை கடல் எல்லையை கடந்து வருகின்ற போதும், அவற்றை கைப்பற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையின் 116 மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில், அறிவித்திருந்தது.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்படுவதாக மத்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு நிகராக, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியிலும் நுழைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள், மிகப்பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இந்தியா முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில், எமது செய்திப்பிரிவு வினவியபோது அமைச்சர் நியோமல் பெரேரா இதனை தெரிவித்தார்.


இலங்கைத் தமிழர் குறித்து சிவ்சங்கர் தமிழக முதல்வருடன் ஆலோசனை


No Image
தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் நேற்று முதல்வர் கருணாநிதியை சென்னையில் சந்தித்து, இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்றதையடுத்து நேற்று சென்னை வந்த அவர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக, முதலமைச்சர் கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இந்தத் தாக்குதல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக விரிவாகப் பேசினோம்.

தற்போது இலங்கையில் போருக்கு பின்னர், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து முதலமைச்சர் பெரிதும் கவலை வெளியிட்டார். இந்த விஷயத்தில் இந்திய அரசு தரப்பில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளித்தேன்.

இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. தற்போது முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும், தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு வழங்குவது குறித்தும் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாக முதல்வரிடம் நான் கூறினேன் " என்றார்.

மகிந்த ராஜபக்ஷ 2 ஆவது முறையாக ஜனாதிபதியாகியுள்ளார். எனினும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறாத நிலையில், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வை முழுமையாக செயல்படுத்தினால்தான் இலங்கையின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என இந்தியா கருதுவதாகத் தெரிகிறது.

இது தொடர்பான நடவடிக்கைகளிலும் அது இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியை மேனன் சந்தித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

31 ஜனவரி, 2010

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது


அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும்



இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை
No Image

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன



நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை .தே..வினால் நிராகரிப்பு




நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் இரகசியங்கள் அம்பலமாகும்;அரசாங்கத்திற்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை


தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள் தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம் தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

"எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ் உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம் கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம். ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது"இப்போது என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளோம்" என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது"எதிர்க்கட்சித் தலைவரை அல்லது என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது"என சரத் பொன்சேகா கூறினார்.


பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு


இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடி யாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தநிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13 ஆவது அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான் மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் இதுவரை காலமும் தமது வாக்குகளை வழங்கமுடியாத நிலையில் இருந்தனர். எனினும் தற்போது அவர்கள் எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன் சேகாவுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர் இதிலிருந்து அவர்களின் கருத்து வெளிப்பட்டுள்ளதுதானே எனக்கேட்டமைக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு கிழக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்ற சரத் பொன்சேகாவின் குற்றச்சாட் டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். "இக்குற்றச்சாட்டுக்கு அவர் நீதி மன்றத்தில் பதில் தேடிக்கொள்ள முடியும். பிரஜைகளின் 58 சதவீத வாக்குகள் கிடைத் திருப்பது போதிய ஆதாரமாகும். அந்தளவு வாக்குகள் முறைகேடுகள் மூலம் எப்படி கிடைக்கும்" என ஜனாதிபதி கேள்வி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...