14 ஏப்ரல், 2010

சீனாவில் நில நடுக்கம் : 300 பேர் பலி,8000 பேர் காயம்




சீனாவி‌ன் வடமேற்கு மாகாணமான கியுங்காய் பகுதியில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். 8000 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சீன நேரப்படி இன்று காலை 7.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து 3 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் பாதுகாப்பு தீவிரம் : விசேட அதிரடிப் படை சேவையில்



நாவலப்பிட்டிய பகுதிக்கு 400 வீரர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படை அணியொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்திலும், அதன் பின்னரும் தொடர்ந்து அரசியல் ரீதியான பல அசம்பாவிதங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து பொலிஸ் மா அதிபர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்பு வரை சிறந்த பாதுகாப்பினை வழங்கும் பொருட்டே மேற்படி அணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை மனோ கணேசன், ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், திலும் அமுனுகம உட்படப் பல அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

20ஆம் திகதி இடம்பெறவுள்ள மீள் வாக்களிப்புக்கான பிரசாரப் பணிகளை எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்க முடியும் என்பதனால் அதுவரை இடம்பெறும் அரசியல் கூட்டங்கள் மற்றும் பிரசாரப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விசேட அதிரடிப்படை சேவையாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அனைத்து மக்களிடையேயும் சமாதானம் ஏற்பட புதுவருடம் வழிக்கோலட்டும் : ரணில் வாழ்த்து




அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த இந்த புதுவருடம் வழிகோலட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சித்திரைப் புதுவருடம் தமிழ்-சிங்கள மக்களிடையே இன ஐக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கும் முக்கிய நிகழ்வாகும்.

அமைதியானதும் சுபீட்சமானதுமான முறையில் இந்த பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிட்ட வேண்டும்.

இன ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் சமூகத்தில் சில செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தருணமாக தமிழ்-சிங்களப் புதுவருடத்தை நாம் கருதுகின்றோம்.

உதயமாகும் புதுவருடம் இனங்களுக்கு இடையே சமாதானத்தை வியாபிக்கக் கூடிய ஓர் ஆண்டாக அமைய வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

திருப்தியான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடம் : வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி




தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். சிங்கள, தமிழ் மக்கள் சம நிலையில் நின்று கொண்டாடும் புதுவருட கொண் டாட்டங்கள் எமக்கிடையிலான உறவுகளை அங்கீகரிப்பதாக அமைகின்றது.

எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங் களின் தொடர்ச்சியாகவே இதனைக் காண முடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது.

விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.

எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தாற்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்ளாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் சிங்கள - தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியடைதல் போன்ற உணர்வுகளுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு, எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள்." இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நிறைவு: மாநாட்டின் நிறைவில் கூட்டறிக்கை


வாஷிங்டனில் நடைபெற்ற இரண்டு நாள் அணு சக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு செவ்வாய்ககிழமை நிறைவடைந்தது. மாநாட்டின் நிறைவில் பங்கேற்ற நாடுகள் அனைத்தும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

42 நாடுகள் பங்கேற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் நடைபெற்றது. செவ்வாய்ககிழமை மாநாட்டின் நிறைவில், கூட்டறிக்கையும் 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்டமும் வெளியிடப்பட்டன.

கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: "அணுசக்தி பொருள்களுக்கு அனைத்து நாடுகளும் உரிய பாதுகாப்பு அளிப்பது, அனைத்து நாடுகளும் அணுசக்தி பாதுகாப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுவது, தேவைப்பட்டால் பிற நாடுகளுக்கு உதவுவது, அணுசக்தி தீவிரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது,

அணுசக்தியை ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது, சட்ட விரோத அணுசக்தி வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பது, நாடுகளுக்கு இடையே அணுசக்தி தொழில்நுட்பம், சட்ட ஒருங்கிணைப்பு, குற்றப்புலனாய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது' என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அடுத்த அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு 2012-ம் ஆண்டில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

அணி சாரா இயக்க நாடுகள் கூட்டம்: இந்தியாவுக்கு அழைப்பில்லை





அமெரிக்கா நடத்திய அணி சாரா உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இந்தியா அழைக்கப்படவில்லை.

அணி சாரா இயக்கம் உருவானதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது அமெரிக்காவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள் அமெரிக்காவில் கூடியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், தனது இல்லத்தில் அணிசாரா இயக்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை மதிய உணவு விருந்து அளித்தார். அதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்காததால் அக்கூட்டத்தில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

அணிசாரா நாடுகள் இயக்கத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டும் இக்கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. தடை சட்டத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. சிலி, செüதி அரேபியா, அல்ஜீரியா, எகிப்து, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய பாதையின். தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்



நாளை விகிர்தி வருடம் பிறக்கின்றது. இன்று விரோதி வருடத்தின் இறுதிநாள். பழையன கழி தலும் புதியன புகுதலும் வழமை நிகழ்வுகள். புதுவருடத்தில் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை யும் மனநிறைவையும் அளிக்கவல்ல புதிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டுமெனப் பிரார்த்திப்போம்.புதிய வருடத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்கவுள்ளது. நாட்டில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சி னைகளுக்குப் புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்வு கிடைக் கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண் டும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கும் பொறு ப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்டு.

தாமதமின்றித் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுள் இனப் பிரச்சினை முதலிடம் வகிக்கின்றது. சிங்கள மக்களின் பிரநிநிதிகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிக ளும் யதார்த்தபூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுவார்க ளேயானால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எவ் வித சிரமமும் இருக்காது. இனப்பிரச்சினையின் தீர்வை நோக்கிச் செயற்பட வேண்டும் என்ற முடிவை எடுப் பதற்குச் சித்திரைப் புதுவருடம் பொருத்தமான சந்தர்ப்பம்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவின் கொள்கை மாற்றம் அகதிகளின் வருகையை குறைக்கப்போவதில்லை!





இலங்கை ஆப்கான் அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு கொண்டுவந்திருக்கும் கொள்கை மாற்றமானது அகதிகளின் வருகையை குறைக்கப் போவதில்லையென்று அவுஸ்திரேலியாவில் வெளியாகும் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகள் பலர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு புதிய அகதிகளுக்கு இடநெருக்கடி காணப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் இலங்கை மற்றும் ஆப்கான் நிலவரங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான காலஅவகாசம் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கொள்கை மாற்றம் தற்போது கிறிஸ்துமஸ் தீவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பொருந்தாதென அறிவிக்கப்படுகிறது. புதிய அகதிகள் மீண்டும் படகுகளில் வராதிருக்கும் வகையில் இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த எண்ணம் தோல்வி கண்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ள த மோர்சின் ஹெரால்ட், இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டுமொரு படகு மீட்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றம் வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாதென அரசு தெரிவிப்பு




தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றம் வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு வருவதில் எந்தச் சிக்கலும் கிடையாது. இதற்கு முன்னரும் சிறையிலிருந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்துள்ளனர். கைவிலங்கு போடப்பட்டிருந்த உறுப்பினர்களும் வந்து சென்றுள்ளனர். ஆனால், சரத் பொன்சேகாவுக்கு கைவிலங்கு போடப்பட்ட நிலைமைகள் எதுவும் கிடையாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா சுவாமியின் வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு





நித்யானந்தா சுவாமியின் நடவடிக்கைகளை சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவிடக் கோரும் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

நித்யானந்தாவின் நடவடிக்கை

நித்யானந்தா சுவாமியையும், நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சமீபத்தில் சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் படங்களும், செய்திகளும் வெளியாகின. நித்யானந்தா பற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டிலும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நித்யானந்தா சுவாமியின் சீடரான நித்யதர்மானந்தா என்கிற லெனின் கருப்பன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ``சர்வதேச உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நித்யானந்தா சுவாமியின் நடவடிக்கைகளை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:-

மனு தள்ளுபடி

நாட்டில் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் அறிவுறுத்தி கூறியபிறகும், இதுபோன்ற சாமியார்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களை இன்னமும் சரிசெய்ய முடியவில்லையே என்பது துரதிருஷ்டவசமானது. தங்களது நலனுக்காக அப்பாவி குடிமகன்களை சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக அரசு ஏஜென்சிகள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படும். நித்யானந்தாவின் பக்தரான மனுதாரரின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மோசடி மூலம் கணிசமான பணம் வசூல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ஒரு மத்திய ஏஜென்சி விரிவாக விசாரிக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதன்காரணமாக வழக்கு அந்த மாநிலத்திற்கும் மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்த வழக்கு கர்நாடக மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவில் நிலுவையில் உள்ளது. அந்த ஏஜென்சி பற்றியும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு ஏற்ற வழக்காக கருத முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...