1 பிப்ரவரி, 2010


உலகம் குழந்தைகளை கடத்திய 10 அமெரிக்கர்கள் கைது



போர்ட் ஆப் பிரின்ஸ் : பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹைதி தீவிலிருந்து 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்றதாக 10 அமெரிக்கர்களை ஹைதி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் ஹைதி மக்கள் தொடர்பு அதிகாரி இந்தத் தகவலை தெரிவித்தார்.
சில்ஸ்பி லாரா லாவோன் என்ற அமெரிக்கப் பெண்ணின் தலைமையில் அமெரிக்கர்கள் 33 குழந்தைகளைக் கூட்டிச் சென்ற போது மால்பாசோ என்ற எல்லையோர நகரில் பிடிபட்டனர் என ஹைதி போலீசார் கூறினர்.
அவர்கள் பணம் கொடுத்து ஹைதி குழந்தைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதைத் தவிர ஹைதி அரசின் அனுமதி இல்லாமல் மைனர்களான குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவும் சட்டமீறலாகும் என ஹைதி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் புகார்களை லாரா லாவோன் மறுத்தார். இங்கு அனாதைக்குழந்தைகளுக்காக ஆதரவு இல்லம் அமைப்பது எங்கள் திட்டம். அதற்காக நிலம் கூட வாங்கிவிட்டோம். விரைவில் அங்கு கட்டடம் அமைக்கப்படும். அது வரை காபார்த்தி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குழந்தைகளை தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த அநாதைக் குழந்தைகளின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்பவே அவர்களை அழைத்துச் சென்றோம் என லாரா லாவோன் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் அழைத்துச் சென்ற குழந்தைகள் எல்லாம் போர்ட் ஆப் பிரின்ஸ் நகருக்கு வெளியே உள்ள அரசு அனாதைகள் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹைதியிலிருந்து இளங்குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்ல நடக்கும் முயற்சிக்குஹைதி பிரதமர் ஜீன் மாக்ஸ் பெல்லாரிவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதி (யுனிச்செப்) அதிகாரிகளும் கண்டனம் செய்துள்ளனர். தரை வழி எல்லைகள், விமான நிலையங்களில் எங்கள் அதிகாரிகள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவார்கள் என யுனிச்செப் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக