21 ஜூன், 2011

த.தே.கூ தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு: வாசுதேவ

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய குழுவினரே யாழ்ப் பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிரபாகரனின் தயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுக் கொன்று வீசியவர்களும் இத்தகைய குழுவினரேயாவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் அளவெட்டியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அப்பிரதேசத்தில் உருவாகப் போகும் ஜனநாயகச் சூழலை இல்லாதொழிப்பதே இத் தாக்குதலின் நோக்கமாகும். இதன் மூலம் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள் தள்ளுவதுமே சூத்திரதாரிகளின் நோக்கமாகும்.

இராணுவத்தில் உள்ள பிடிவாதமுடைய தமிழ் மக்களுக்கு எதிரான இரகசியக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். இக்குழுவினர் தான் பிரபாகரனின் தாயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில் நாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவ்விடத்தில் வீசியவர்களுமாவர்.

இக்குழு அரசியல் ரீதியாக செயற்படுவதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் குழுவாகும். எனவே இராணுவத்தில் இயங்கும் இந்த இரகசிய குழு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி கண்டுபிடித்து களைய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பயங்கரமான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். இக்குழுவினரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இன்று ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அமெரிக்காவில் ஒரு பிராந்தியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் பிராந்திய மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே எதுவும் செல்லுபடியாகாது. எமது நாட்டுக்குள்ளேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு அதனை இரத்து செய்யும் அதிகாரம் உண்டு. சனல் 4இல் ஒளிபரப்பாகிய எமது இராணுவத்தினர் தொடர்பான வீடியோ நாடாவை கோரியுள்ளோம். அது தொடர்பில் ஆராய்ந்து இராணுவத்தினர் குற்றங்கள் செய்திருப்பின் அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வெறுமனே ஆதாரங்கள் இன்றி திரைப்படத்தை காண்பிப்பது போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக