26 மே, 2011

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள்: மூன்று இலட்சம் பேர் மீள்குடியமர்வு; அரசு மனிதாபிமான நல்வாழ்வளிப்பு

அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச
அமைப்புகள் உதவியுடன் நிறைவேற்றம்



பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமூகப் பணியை மனிதாபிமான முறையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் மீள்குடியேற்றப் பணிகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தும், மன்னாரில் இருந்தும் வெறுமனே 48மணி நேர முன்னறிவித்தலை கொடுத்த பின்னர் அங்கிருந்து எல்.ரி.ரி.ஈயினரினால் விரட்டியடிக்கப்பட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணிகளையும் அரசாங்கம் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட யாழ்ப்பாண குடாநாட்டுக்கும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்த போதும் அரசாங்கம் அனுப்பி வைக்கத் தவறவில்லை.

எல்.ரி.ரி.ஈயினர் இந்த உணவுப் பொதிகளை தங்களின் சொந்தத் தேவைக்காக அபகரித்துக் கொண்டது மட்டுமன்றி அவற்றை இப்பிரதேசங்களுக்கு ஏற்றிச் சென்ற லொறிகளையும், கப்பல்களையும் தாக்கி சேதப்படுத்திய போதிலும், பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் அரசாங்கம் உணவுப் பண்டங்களை இந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வன்னியில் யுத்தம் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ யினர் கேடயங்களாக வைத்து, அவர்களுக்கு பின்னால் மறைந்திருந்தவாறு இலங்கை ஆயுதப் படை வீரர்களை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும், இலங்கை இராணுவத்தினர் ஆத்திரமடையாமல் சாதாரண மக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் எல்.ரி.ரி.ஈ தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து, இறுதியில் எந்தவொரு உலகநாடும் செய்ய முடியாத ஒரு பெரும் சாதனையை புரிந்துள்ளார்கள்.

யுத்தத்தின் போது பணயக் கைதிகளாக எல்.ரி.ரி.ஈயினர் வைத்திருந்த சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பொதுமக்களை இலங்கைப் படையினர் பாதுகாப்பான முறையில் மீட்டெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நலன்புரி முகாம்களில் சேர்த்து அங்குள்ள மக்களுக்கு உணவு விநியோகம் உட்பட சகல சுகாதார வசதிகளையும், இருப்பிட வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

இவ்விதம் பல்லாண்டு காலம் எல்.ரி.ரி.ஈ கொடுமையினால் தங்கள் உரிமைகளையும் சுய கெளரவத்தையும் இழந்து, அல்லல்பட்டுக் கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான மீள்வாழ்வு செயற்பாடுகளினால் அவர்கள் எதிர்பாராதவாறு ஒரு அமைதியான புதுவாழ்வு இன்று கிடைத்திருக்கிறது. நலன்புரி முகாம்களில் இருந்த பிள்ளைகளின் கல்விக்காக அரசாங்கம் அங்கு பாடசாலைகளை ஆரம்பித்து, அப்பிள்ளைகளை ஜி.சி.ஈ சாதாரண பரீட்சையில் சித்தியடைவதற்கு ஏற்றவகையில் கல்வியையும் புகட்டிய சாதனையை புரிந்துள்ளது.

யுத்தத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து, துன்பத்தில் மூழ்கியிருந்த மக்களுக்கு புதிய வாழ்வாதாரங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவியதுடன் அம்மக்களுக்கு தொழிற்பயிற்சியையும் இந்த முகாம்களில் வழங்கி வந்தது.

இவ்விதம் அரசாங்கம் தனது தேசிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செலவிட்டுள்ளது. இப்போது வடபகுதியில் பாதைகளை அமைத்தல், ரயில் பாதையை நீடித்தல், யுத்தத்தினால் சிதைந்து போன பாடசாலை கட்டடங்கள், அரசாங்க கட்டடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளை திருத்தியதீ மத்தும் வருகின்றது.

யுத்த காலத்தில் வடபகுதிக்கு 60 சதவீதமான வைத்திய உபகரணங்களை யும், மருந்து வகைகளையும் அரசாங்கம் அனுப்பி வைத்து, அங்குள்ள நோயாளிகளுக்கு உதவி செய்தது. எஞ்சிய 40 சதவீத மருந்துகளை தென் இலங்கைக்கு விநியோகித்தது.

இவ்விதம் யுத்தம் முடிவடைந்த பின்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்த போதும் அரசாங்கம் தனது மனிதாபிமான பணிகளை சரியான முறையில் மேற்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பேருதவி புரிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக