26 மே, 2011

ஆஸ்திரேலிய அகதி கொள்கைக்கு கண்டனம் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை

ஆஸ்திரேலிய கரையை நோக்கி படகுகளில் வரும் மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆகியோர் குறித்த ஆஸ்திரேலிய கொள்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் சீற்றத்துடன் தாக்கியிருக்கிறார்.

அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களை கட்டாயமாக தடுத்து வைப்பது என்ற ஆஸ்திரேலிய கொள்கையானது அந்த நாட்டின் மனித உரிமைகள் வரலாற்றின் மீது படிந்துள்ள ஒரு கரு நிழல் என்றும், அந்த நாட்டின் பூர்வகுடியினர் குறித்த அரசாங்க கொள்கையானது அந்த மக்களுக்கு ஆழமான தாக்கத்தையும் வலியையும் கொடுத்திருக்கிறது என்றும் நவிபிள்ளை அவர்கள் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குறித்த கொள்கையை நவிபிள்ளை அவர்கள் அண்மைக்காலத்தில் இவ்வாறு பகிரங்கமாக விமர்சிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

அத்துடன் இந்தத் தடவை அவர், தனது விமர்சனத்தை ஆஸ்ரேலியாவின் மூத்த குடிகளான, பழங்குடியின மக்களை அந்த நாட்டு அரசாங்கம் நடத்தும் விதம் குறித்தும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் அவர்களின் அரசாங்கத்தின் தஞ்சக் கோரிக்கையாளர்களை கட்டாயமாக தடுத்து வைக்கும் கொள்கையானது, ஆஸ்ரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளை மீறும் ஒன்று என்றும், அந்த நாட்டின் மனித உரிமை குறித்த பதிவுகளில் நீண்ட காலத்துக்கு அது ஒரு கரு நிழலாக படிந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆண்களும், பெண்களும் மற்றும் அனைத்துக்கும் மேலாக அனைவருக்கும் கவலைதரும் வகையில் குழந்தைகளையும்-- இத்தனைக்கும் அவர்கள் குற்றம் எதுவும் செய்யாத நிலையிலும் கூட தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்கள் குறித்த விவாதங்களின் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஏதோ குறுக்கு வழியில் நன்மை பெறவிழைபவர்களால் தமது நாடு நிரம்பிவிட்டதாக இவர்களை அரசியல்வாதிகள் திரும்பத்திரும்ப விவரிப்பதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் அவர் கடுமையாக சீற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.

பொருத்தமற்ற நெகிழ்வற்ற கொள்கைகள் பழங்குடியின மக்களுக்கு ஆழமான வலியையும், வேதனையும் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுகுறித்த தனது கருத்து எதனையும் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக