15 மார்ச், 2011

அணு உலைகளில் தொடர்ந்தும் வெடிப்பு ஜப்பானில்... நேற்றும் 2000 சடலங்கள் மீட்பு



ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து மூன்றாவது அணு உற்பத்தி நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்திருப்பதால் புக்கிஷிமாவிலுள்ள அணு உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட அதிகரித்த வெப்பத்தால் அங்குள்ள குளிரூட்டிகள் வெடித்து வருகின்றன. கடந்த நான்கு நாட்களில் 3 அணு உற்பத்தி நிலையங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வெடிப்புக்களைத் தொடர்ந்து அணுக்கசிவு ஏற்படுவதற்கான அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம், சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரை 2000ற்கும் அதிகமானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்ட மியாகிப் பிரதேசத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என அந்தப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்தத்தால் ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்குகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், ஜப்பானில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 68 விசேட மீட்புக் குழுக்களை அனுப்புவதற்கு 45 நாடுகள் முன்வந்துள்ளன. முதற்கட்டமாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் கோரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக