17 பிப்ரவரி, 2011

தேர்தல் அடிப்படைச் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன; "கபே' அமைப்பு கூறுகிறது


அடிப்படைச் சட்டங்கள் மற்றும் தேர்தல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. வடக்கில் அச்சம் சூழ்ந்து கொண்டுள்ளது. பக்கச் சார்பான நடவடிக்கைகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இதுவரையில் 92 தேர்தல் முறைகேடுகள் பதிவாகியுள்ளன.

இவையனைத்தும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு பாரிய நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதாக "கபே' சுட்டிக்காட்டியுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக செயற்பட்டு தமது வாக்கினை அளிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமே இருக்கின்றது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படுகின்ற கபேயின் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கீர்த்தி தென்னகோன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று புதன்கிழமை நண்பகல் வரையில் நாடளாவிய ரீதியில் 92 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தாக்குதல், அச்சுறுத்தல் மற்றும் தேர்தல் காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் சுதந்திரமாக பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதிருக்கின்றது.

வடக்கில் எதிர்த் தரப்பினருக்கான சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மக்களிடத்தில் செல்ல முடியாதுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தேர்தல் தொடர்பில் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. இதற்குக் காரணமே அங்கு இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகளேயாகும்.

குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மாத்திரமே வடக்கின் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில முக்கிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. மாற்றுத் தரப்பினருக்கு இந்த அனுமதி மறுக்கப்படுகின்றது. இது அடிப்படை மற்றும் தேர்தல் சட்டம் ஆகியவற்றினை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொலிஸார் இவ்விடயத்தில் தமது பொறுப்பினை தவற விட்டுள்ளனர். பாதுகாப்புத் தேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தமது கடமையைச் சரிவரச் செய்வார்களேயானால் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்க முடியாது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் வடக்கு கிழக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் நீதியான சுதந்திரமான தேர்தல் நடைபெறாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக