24 நவம்பர், 2010

துறைமுக லொறிகளிலிருந்து பொருட்கள் திருடும் கும்பல் பாதாள உலகத் தலைவர் சார்ள்ஸ், 21 பேர் கைது

கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளிலிருந்து பொருட்களை திருட்டுத்தனமாக இறக்கி விற்பனை செய்யும் பாரிய அளவிலான மோசடி ஒன்றினை கண்டுபிடித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதனோடு தொடர்புடைய பாதாள உலகத் தலைவன் சார்ள்ஸ் உட்பட 21 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இறக்கிய பொருட்களின் பெறுமதி சுமார் ஒருகோடி ரூபாவிலும் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழங்கு, பருப்பு, வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு என்பன அதில் சிலவாகும். இந்த பொருட்களை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்று, மூன்று லொறிகள், தராசுகள், ஆயுதங்கள், சாவி வெட்டும் கருவிகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிரேண்ட்பாஸ் மாவத்தை பிரதேசத்தில் 15 வருட காலமாக இந்த திருட்டுக் களஞ்சியசாலை நடத்திச் செல்லப்பட்டுள்ளது. பாதாள உலகக் கும்பல்களால் மேற்கொள் ளப்பட்டு வந்த இந்த பாரிய அளவிலான மோசடியினை பொலிஸார் முற்றுகையிடாமைக்கான காரணம் பலரது அச்சுறுத்தலென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் பொலிஸ்மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவினால் இந்த இடம் முற்றுகையிட்டு மோசடிக்காரர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடித்து அழித்துவிடுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு அறிவு ரை வழங்கப்பட்டது. அதன் பிரகாரம் நேற்று முன்தினம் மாலையில் 15 பொலிஸ் அதிகாரிகளடங்கிய குழுவொன்று இந்த முற்றுகையை ஆரம்பித்தது.

அந்த நேரத்தில் கூட கடத்தப்பட்ட பொருட்கள் மூன்று லொறிகளில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோசடியில், அதிகம் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களே சிக்கியுள்ளதுடன் அதனை கொண்டு செல்லும் லொறியின் சாரதிகளும் இந்த பாதாள உலக மோசடிக்காரர்களுக்கு உதவியுள்ளனர்.

துறைமுகத்திலிருந்து வெளியேறும் லொறிகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்து அதிலிருந்து ஒரு பகுதி பொருட்களை இறக்கிவிட்டு மீதியை அனுப்புவதாகவும், இறக்கிய பொருட்களை பாதாள உலகக் கும்பல் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் விற்பனை செய்து வந்துள்ளது. இந்தத் திருட்டின் மூலம் பாதாள உலகக் கோஷ்டியினர் ஒரு வாரத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வருமானத்தைப் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் வியாபாரிகள் தமது நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பொருட்களின் விலையை அதிகரித்து அதனை நுகர்வோரிடமிருந்து அறவிட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதாள கோஷ்டியினரின் திருட்டுக்களஞ்சியத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளதுடன், கைது செய்துள்ள பாதாள உலகத் தலைவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை நேற்று (23) நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஆரியரத்னவின் கண்காணிப்பின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த தன்ஓவிட்ட, பொலிஸ் பரிசோதகர் குலரத்ன, சமுது உள்ளிட்ட குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக