12 அக்டோபர், 2010

2011 இல் நாடுதழுவிய ரீதியில் சனத்தொகை கணக்கெடுப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள் ளது. இதற்கு தேவையான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வட க்கு கிழக்கில் 30 வருடங்களுக்கு பின்னர் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது விசேட அம்சமாகும் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி.பி. சுரஞ்சனா வித்தியாரட்ன தெரிவித்தார்.

அதாவது 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இருக்கின்ற மக்களே சனத் தொகைக்கு உள்ளடக்கப்படுவர். அந்த வகையில் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் தங்கியிருக்காவிடின் அவர்கள் சனத்தொகை கணக்கெடுப்புக்கு உள்ளடக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பணிப்பாளர் நாயகம் அங்கு மேலும் கூறியதாவது:

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கு 30 வருடங்களாக புள்ளிவிபரவியல் கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பு வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரைப்படம் தயாரித்தல் கட்டடங்களை வரிசைப் படுத்தல் என தேவையான ஆரம்பகட்ட அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் சனத் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இதற்காக நாடளாவிய ரீதியில் ஒரு மாதத்துக்கு பணிபுரிய 65 ஆயிரம் தற்காலிக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் இது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வர்.

இந்நிலையில் சனத்தொகை கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு மாதத்தில் ஆரம்பகட்ட முடிவுகளை வெளியிட முடியும். அதாவது சனத் தொகை இன மத வயது அடிப்படையில் சனத் தொகை புள்ளிவிபரங்கள் போன்றன வெளியிடப்படும். அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஏனைய புள்ளிவிபரங்கள் வெளியிடப்படும். கணக்கெடுப்பு முடிவடைந்து ஒரு வருடத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். எனவே இந்த வேலைத்திட்டத்தை மிகவும் சிறப்பாக செய்து முடிக்க எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை சனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்ற காலத்தில் அதாவது அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் இருப்பவர்களே சனத்தொகை கணக்கெடுப்புக்கு உள்ளடக்கப்படுவார்கள். அதன்படி பார்க்கும்போது தற்போது இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இருக்காவிடின் அவர்கள் சனத் தொகை கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக